திருமுருகாற்றுப்படை (திருச்சீரலைவாய் - திருச்செந்தூர்)

வைந்நுதி  பொருத  வடுஆழ்  வரிநுதல் 
வாடா  மாலை  ஓடையொடு  துயல்வர 
படுமணி  இரட்டும்  மருங்கின்  கடுநடை 
கூற்றத்  தன்ன  மாற்றஅரு  மொய்ம்பின் 
கால்  கிளர்ந்தன்ன  வேழம்  மேல்கொண்டு 
ஐவேறு  உருவின்  செய்வினை  முற்றிய 
முடியொடு  விளங்கிய  முரண்மிகு  திருமணி 
மின்உறழ்  இமைப்பின்  சென்னிப்  பொற்ப 
நகைதாழ்பு  துயல்வரூஉம்  வகைஅமை  பொலங்குழை 
சேண்விளங்கு  இயற்கை  வாள்மதி  கவைஇ 
அகலா  மீனின்  அவிர்வன  இமைப்ப 
தாஇல்  கொள்கைத்  தம்தொழில்  முடிமார் 
மனன்நேர்பு  எழுதரு  வாள்  நிறமுகனே 
மாஇருள்  ஞாலம்  மறுஇன்றி  விளங்க 
பல்கதிர்  விரிந்தன்று  ஒருமுகம்; 
ஒருமுகம்  -  ஆர்வலர்  ஏத்த  அமர்ந்து  இனிது  ஒழுகி 
காதலின்  உவந்து  வரம்  கொடுத்தன்றே; 
ஒருமுகம்  -  மந்திர  விதியின்  மரபுளி  வழாஅ 
அந்தணர்  வேள்வி  ஓர்க்கும்மே; 
ஒருமுகம்  -  எஞ்சிய  பொருள்களை  ஏமுற  நாடித் 
திங்கள்போலத்  திசை  விளக்கும்மே; 
ஒருமுகம்  -  செறுநர்த்  தேய்த்துச்  செல்சமம்  முருக்கி 
கறுவுகொள்  நெஞ்சமொடு  களம்வேட்டன்றே; 
ஒருமுகம்  -  குறவர்  மடமகள்  கொடிபோல்  நுசுப்பின் 
மடவரல்  வள்ளியொடு  நகை  அமர்ந்தன்றே 
ஆங்கு  அம்மூஇருமுகனும்  முறைநவின்று  ஒழுகலின் 
ஆரம்  தாழ்ந்த  அம்பகட்டு  மார்பின் 
செம்பொறி  வாங்கிய  மொய்ம்பின்  சுடர்விடுபு 
வண்புகழ்  நிறைந்து  வசிந்துவாங்கு  நிமிர்தோள் 
விண்செலல்  மரபின்  ஐயர்க்கு  ஏந்தியது  ஒருகை; 
உக்கம்  சேர்த்தியது  ஒருகை; 
நலம்பெறு  கலிங்கத்துக்  குறங்கின்மிசை  அசைஇயது  ஒருகை; 
அங்குசம்  கடாவ  ஒருகை; 
இருகை  -  ஐஇரு  வட்டமொடு  எஃகுவலம்  திரிப்ப; 
ஒருகை  -  மார்பொடு  விளங்க; 
ஒருகை  -  தாரொடு  பொலிய; 
ஒருகை  -  கீழ்வீழ்  தொடியொடு  மீமிசைக்  கொட்ப; 
ஒருகை  -  பாடுஇன்  படுமணி  இரட்ட; 
ஒருகை  -  நீல்நிற  விசும்பின்  மலிதுளி  பொழிய; 
ஒருகை  -  வான்அர  மகளிர்க்கு  வதுவை  சூட்ட 
ஆங்கு  அப்பன்னிருகையும்  பாற்பட  இயற்றி 
அந்தரப்பல்லியம்  கறங்கத்  திண்காழ் 
வயிர்எழுந்து  இசைப்ப  வால்வளை  ஞரல 
உரம்  தலைக்கொண்ட  உரும்இடி  முரசமொடு 
பல்பொறி  மஞ்ஞை  வெல்கொடி  அகவ 
விசும்பு  ஆறுஆக  விரைசெலல்  முன்னி 
உலகம்  புகழ்ந்த  ஒங்குஉயர்  விழுச்சீர் 
அலைவாய்ச்  சேறலும்  நிலைஇயபண்பே,  அதான்று 
  • வைந்நுதி
    கூர்மையான நுனியை/முனையை உடைய அங்குசம் [தோட்டி]
  • வடு
    தழும்பு
  • வரி
    செம்புள்ளி/புகர்
  • நுதல்
    நெற்றி
  • வாடா மாலை
    [பொன்னால் செய்யப்பட்டதால்] வாடாத பொன்னரி மாலை
  • ஓடை
    [யானை முகத்தில் அணியப்படும்] நெற்றிப் பட்டம்
  • துயல்வர
    அசைய
  • படுமணி இரட்டும் மருங்கின்
    [யானை தன் கால்களை மாற்றி மாற்றி வைத்து நடக்கும்போது] அதன் இரு பக்கங்களிலும் தொங்கும் மணிகளும் மாறி மாறி ஒலிக்கும்
  • கடு நடை
    விரைவான நடை
  • கூற்றம்
    யமன்
  • மொய்ம்பு
    வலிமை
  • கால்
    காற்று
  • கிளர்தல்
    எழுதல்
  • வேழம்
    யானை
  • முரண்மிகு திருமணி
    ஒன்றுடன் ஒன்று நிறத்தால் மாறுபட்டிருக்கும் அழகான மணிகள்
  • மின் உறழ்
    மின்னலைப் போன்று
  • இமைப்பு
    விளங்குதல்
  • சென்னி பொற்ப
    திருமுடியில் அழகு செய்ய
  • நகை தாழ்பு
    ஒளி பொருந்தி
  • துயல்வரூஉம்
    அசையும்
  • பொலங்குழை
    பொன்னாலாகிய மகரக் குழை எனப்படும் காதணி
  • சேண் விளங்கு
    தொலை தூரத்தில் ஒளியுடன் விளங்கும்
  • வாள் மதி
    ஒளியையுடைய திங்கள் [சந்திரன்]
  • கவைஇ
    சூழ்ந்து
  • அகலா மீனின்
    நீங்காத விண் மீன்களைப் போன்று
  • அவிர்வன இமைப்ப
    விளக்கமாக ஒளி வீச
  • தாஇல்
    குற்றம் இல்லாத
  • கொள்கை
    நோன்பு
  • தம் தொழில் முடிமார்
    தாம் மேற்கொண்ட செயலை நிறைவு செய்பவரது
  • மனன் நேர்பு எழுதரு
    மனத்தில் பொருந்தித் தோன்றும்
  • வாள் நிற முகனே
    ஒளிமிக்க செந்நிறமான திருமுருகப்பெருமானின் [ஆறு] திருமுகங்களில்
  • மாஇருள்
    மிகுதியான அல்லது பெரிய இருள்
  • மறு இன்றி
    குற்றம் இல்லாது
  • ஆர்வலர்
    ஆர்வம் உடைய அடியார்கள்/பக்தர்கள்
  • ஏத்த
    பாராட்டிப் புகழ்ந்து துதிக்க
  • உவந்து
    மகிழ்ந்து
  • வரம் கொடுத்தல்
    பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு வழங்குதல்
  • மரபுளி
    மரபின் வழியில்
  • ஓர்க்கும்
    ஏற்று மகிழும்
  • எஞ்சிய பொருள்கள்
    சமய நூல்களால் உணர்த்தப்பட இயலாத மெய்ப் பொருள்கள்
  • ஏம்உற
    அருட்காவலில் பொருந்தியிருக்குமாறு
  • செறுநர்
    பகைவர்
  • செல்சமம்
    மேலும் செல்வதற்குரிய போர்
  • முருக்கி
    கொன்று அழித்து
  • கறுவுதல்
    [தீமையை அழிக்கும் நோக்கத்துடன்] சினத்தல்
  • களம் வேட்டன்று
    போர்க் களத்தில் வேள்வி நடைபெறச் செய்கின்றது
  • கொடிபோல் நுசுப்பின் மடவரல்
    பூங்கொடி போன்ற இடையையும் இளமையையும் உடைய [வள்ளி-அம்மையார்]
  • ஆரம்
    மாலை
  • தாழ்ந்த
    தாங்கிய
  • அம்பகட்டு மார்பு
    அழகிய பெரிய [விசாலமான] மார்பு
  • செம்பொறி வாங்கிய
    சிவந்த (மூன்று] வரிகளைப் பெற்றதாக
  • மொய்ம்பு
    வலிமை
  • சுடர் விடுபு
    ஒளி பொருந்திய வேற்படையினைச் செலுத்தி
  • வசிந்து
    பிளந்து
  • வாங்கு நிமிர் தோள்
    [முன்னர் செலுத்திய வேற்படையினை திரும்பப் பெறவேண்டி நிமிர்ந்து நிற்கும் தோள்
  • விண் செலல் மரபின் ஐயர்
    [முக்திப் பேற்றினை அடைந்து] விண்ணுலகு செல்லும் தலைமைப் பண்பு உடைய முனிவர்
  • உக்கம்
    இடுப்பு
  • நலம்பெறு கலிங்கம்
    செந்நிற ஆடை
  • குறங்கு
    தொடை
  • அசைஇயது
    கிடந்தது
  • அங்குசம்
    யானையைச் செலுத்துவதற்குரிய கருவி
  • கடாவ
    செலுத்த
  • ஐஇரு வட்டம்
    அழகான பெருமை பொருந்திய கேடயம்
  • எஃகு
    வேல்
  • கீழ்வீழ் தொடி
    [கையை மேலே உயர்த்தும்போது] கீழ்நோக்கி நழுவும் கையில் அணியப்பெற்ற அணிகலனாகிய தொடி, அல்லது வளையள்
  • மீமிசை
    மேலே
  • கொட்ப
    சுழல
  • பாடுஇன்
    ஓதப்படும் பாடலுக்கேற்ற இனிய [ஓசை]
  • படுமணி
    ஓசை உண்டாக்கும் மணி
  • இரட்ட
    ஒலிக்க
  • மலிதுளி
    மிகுதியான மழை
  • வதுவை
    திருமணம், திருமண மாலை
  • ஆங்கு
    மேற்கூறியவாறு
  • பாற்பட
    பொருந்துமாறு
  • இயற்றி
    பணி செய்து
  • அந்தரப்பல்லியம்
    'துந்துபி' போன்ற வானோரின் இசைக் கருவிகள்
  • கறங்க
    ஒலிக்க
  • திண் காழ் வயிர்
    திண்மையான வயிரத்தை உடைய ஊதுகொம்பு
  • வால்வளை
    வெண்மையான சங்கு
  • உரம் தலைக்கொண்ட
    வலிமையைத் தன்னிடத்தே உடைய
  • உரும்இடி
    அச்சம் தரும் வகையில் முழங்கும் இடி [உருமேறு]
  • பல்பொறி மஞ்ஞை
    பல பீலியை [இறகுகளை] உடைய மயில்
  • வெல் கொடி
    வெற்றியைத் தரும் கொடி
  • அகவ
    கூவி ஒலிக்க
  • ஆறாக
    வழியாக

kaumaram.com மற்றும் பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com