திருப்புகழ் · 938சந்திதொறும் நாணம் (சிங்கை-காங்கேயம்)sandhidhoRumnANam
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh
சந்திதொறு நாண மின்றியகம் வாடி
உந்திபொரு ளாக ...... அலைவேனோ
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
தங்கள்வச மாகி ...... அலையாமற்
சுந்தரம தாக எந்தன்வினை யேக
சிந்தைகளி கூர ...... அருள்வாயே
தொங்குசடை மீது திங்களணி நாதர்
மங்கைரண காளி ...... தலைசாயத்
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
என்றுநட மாடு ...... மவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
மங்களம தாக ...... அணைவோனே
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.
பத உரைword meanings
- சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக
அலைவேனோ
காலையும் மாலையும் வெட்கம் இல்லாமல் உள்ளம் சோர்வுற்று வயிறே முக்கிய காரியமாக அலைச்சல் உறுவேனோ? - சங்கை பெற நாளும் அங்கம் உ(ள்)ள மாதர் தங்கள் வசமாகி
அலையாமல்
தினந்தோறும் அச்சம் கொண்டு, உடல் அழகுள்ள விலைமாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், - சுந்தரமது ஆக எந்தன் வினை ஏக சிந்தை களி கூர
அருள்வாயே
அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக. - தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி
தலை சாய
தொங்குகின்ற சடையின் மேல் சந்திரனை அணிந்துள்ள தலைவர், மங்கையும் போர்க்களத்தை ஆள்பவளுமான காளி நாணித் தலை குனிய, - தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று நடம் ஆடும்
அவர் பாலா
தொந்தி திமிதோதி தந்தி திமிதாதி என்று நடனம் ஆடிய சிவபெருமானின் குமாரனே, - துங்கம் உ(ள்)ள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக
அணைவோனே
பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளியை மங்களகரமாகத் தழுவியவனே, - கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல்
கொ(ண்)டு எறிவோனே
கந்தனே, முருகேசனே, நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் இறக்க, அந்த கூரிய வேல் கொண்டு எறிந்து அழித்தவனே, - கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு
பெருமாளே.
(கச்சி) ஏகாம்பரநாதர், கயிலாய நாதர் ஆகிய சிவபெருமானின் பிள்ளையே, கூரிய வேலாயுதத்தை உடையவனே, காங்கேய* நகரில் வாழும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது.
- * KAngkEyam is on the road between EerOde (Erode) and ThiruppUr, 19 miles from the railway station of UththukkuLi.
