திருப்புகழ் · 911தாமரையின் மட்டு (வயலூர்)thAmaraiyinmattu
தானன தனத்த தானன தனத்த
தானன தனத்த ...... தனதான
murugan thiruppugazh
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பி ...... லடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி ...... யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் ...... மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த ...... மறவேனே
காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க ...... நதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் ...... குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று ...... வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த ...... பெருமாளே.
பத உரைword meanings
- தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாமரைப்பூவிலேயே நிரம்பிய மணம்வாய்ந்த மலருக்குச் சமானமான - தாளிணை நினைப்பில் அடியேனை
உன் இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, - தாதவிழ் கடுக்கை
மகரந்தப்பொடி விரியும் கொன்றை, - நாகமகிழ் கற்ப தாருவென
சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து - மெத்திய விராலி மாமலையில்
நிறைந்த விராலிப் பெருமலையில் - நிற்ப நீகருதி யுற்று வாவென
யாம் நிற்போம்* நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று - அழைத்து என்மனதாசை மாசினை அறுத்து
அழைப்பு விடுத்து, என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து, - ஞானமுது அளித்த வாரம்
ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை - இனி நித்த மறவேனே
இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன். - காமனை யெரித்த தீநயன நெற்றி
மன்மதனை எரித்த நெருப்புக்கண் உள்ள நெற்றியையும், - காதிய சுவர்க்க நதி வேணி
வேகமாக வந்த ஆகாய கங்கையைத் தாங்கிய ஜடாமுடியையும், - கானிலுறை புற்றில் ஆடுபணி யிட்ட காது
காட்டிலுள்ள புற்றில் படமெடுத்து ஆடும் பாம்பை அணிந்த காதையும் - உடைய அப்பர் குருநாதா
கொண்ட தந்தை சிவனாரின் குருநாதனே, - சோமனொடு அருக்கன் மீனுலவு
சந்திரனும், சூரியனும், நக்ஷத்திரங்களும் உலவும் - மிக்க சோலை புடைசுற்று வயலூரா
உயரச் சோலைகள் சுற்றியும் உள்ள வயலூரனே**, - சூடிய தடக்கை வேல்கொடு
அகன்ற திருக்கை வேலினைக் கொண்டு, - விடுத்து சூர்தலை துணித்த பெருமாளே.
அதைச் செலுத்தி சூரனது சிரத்தைக் கொய்தெறிந்த பெருமாளே.
குறிப்புகள் · notes
- * இச் சம்பவம் அருணகிரிநாதர் வாழ்க்கையிலே நடந்த வரலாறு - முதல் நான்கு அடிகள் விராலிமலைக்கு சுவாமிகளை முருகன் வரச் சொன்னதை குறிக்கின்றன.
- ** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.
- வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
- * The first four lines denote the real incident that happened to AruNagirinAthar when he was beckoned to come to Him by Murugan Himself.
- ** VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.
- VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.
