திருப்புகழ் 908 குருதி கிருமிகள் (வயலூர்)

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருதி  கிருமிகள்  சலமல  மயிர்தசை 
மருவு  முருவமு  மலமல  மழகொடு 
குலவு  பலபணி  பரிமள  மறுசுவை  ......  மடைபாயல் 
குளிரி  லறையக  மிவைகளு  மலமல 
மனைவி  மகவனை  யநுசர்கள்  முறைமுறை 
குனகு  கிளைஞர்க  ளிவர்களு  மலமல  ......  மொருநாலு 
சுருதி  வழிமொழி  சிவகலை  யலதினி 
யுலக  கலைகளு  மலமல  மிலகிய 
தொலைவி  லுனைநினை  பவருற  வலதினி  ......  யயலார்பால் 
சுழல்வ  தினிதென  வசமுடன்  வழிபடு 
முறவு  மலமல  மருளலை  கடல்கழி 
துறைசெ  லறிவினை  யெனதுள  மகிழ்வுற  ......  அருள்வாயே 
விருது  முரசுகள்  மொகுமொகு  மொகுவென 
முகுற  ககபதி  முகில்திகழ்  முகடதில் 
விகட  இறகுகள்  பறையிட  அலகைகள்  ......  நடமாட 
விபுத  ரரகர  சிவசிவ  சரணென 
விரவு  கதிர்முதி  ரிமகரன்  வலம்வர 
வினைகொள்  நிசிசரர்  பொடிபட  அடல்செயும்  ......  வடிவேலா 
மருது  நெறுநெறு  நெறுவென  முறிபட 
வுருளு  முரலொடு  தவழரி  மருகசெ 
வனச  மலர்சுனை  புலிநுழை  முழையுடை  ......  யவிராலி 
மலையி  லுறைகிற  அறுமுக  குருபர 
கயலு  மயிலையு  மகரமு  முகள்செநெல் 
வயலி  நகரியி  லிறையவ  அருள்தரு  ......  பெருமாளே. 
  • குருதி கிருமிகள் சல(ம்) மல(ம்) மயிர் தசை
    இரத்தம், புழுக்கள், நீர், மலம், மயிர், சதை ஆகிய இவை
  • மருவும் உருவமும் அலம் அலம்
    பொருந்திய உருவை உடைய இந்த உடல் எடுத்தது போதும் போதும்.
  • அழகொடு குலவு பல பணி பரிமளம்
    அழகோடு விளங்கும் பல விதமான நகைகளும், நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும்,
  • அறு சுவை மடை பாயல்
    ஆறு சுவைகள் கூடிய உணவும், படுக்கையும்,
  • குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம் அலம்
    குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட வீடும் - இவைகள் யாவும் போதும் போதும்.
  • மனைவி மகவு அ(ன்)னை அநுசர்கள்
    மனைவி, குழந்தைகள், தாயார், உடன் பிறந்தவர்கள்,
  • முறை முறை குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம் அலம்
    உறவு முறைகளைக் கூறி குலவும் சுற்றத்தினர் இவர்களும் போதும் போதும்.
  • ஒரு நாலு சுருதி வழி மொழி சிவ கலை அலது
    ஒரு நான்கு மறைகளின் வழியை எடுத்துக் கூறும் சைவ சித்தாந்த நூல்களைத் தவிர
  • இனி உலக கலைகளும் அலம் அலம்
    வேறு உலக சம்பந்தமான நூல்களை ஓதுவதும் போதும் போதும்.
  • இலகிய தொலைவு இல் உனை நினைபவர் உறவும் அலது
    விளங்கி நிற்பவனும், அழிவில்லாதவனுமாகிய உன்னை நினைப்பவர்களது நட்பைத் தவிர,
  • இனி அயலார் பால் சுழல்வது இனிது என
    இனி பிறரிடத்தே திரிவது நல்லது என்று
  • வசமுடன் வழிபடும் உறவும் அலம் அலம்
    அவர்கள் வசப்பட்டு, அவர்களை வழிபடுகின்ற நட்பும் போதும் போதும்.
  • அருள் அலை கடல் கழி துறை செல் அறிவினை
    நின் திருவருள் அலை வீசும் கடலின் சங்கமத் துறை வழியில் செல்லும் அறிவை
  • எனது உளம் மகிழ்வுற அருள்வாயே
    என் மனம் மகிழும் பொருட்டு நீ அருள்வாயாக.
  • விருது முரசுகள் மொகு மொகு மொகு என முகுற
    வெற்றிச் சின்னமான பறைகள் மொகு மொகு மொகு என்று பேரொலி செய்ய,
  • ககபதி முகில் திகழ் முகடு அதில் விகட இறகுகள் பறை இட
    கருடன் மேகம் விளங்கும் உச்சி வானத்தில் அகன்ற இறகுகளைக் கொண்டு வட்டமிட,
  • அலகைகள் நடமாட
    பேய்கள் நடனம் செய்ய,
  • விபுதர் அரகர சிவ சிவ சரண் என
    தேவர்கள் அரகர சிவசிவ உன் அடைக்கலம் என்று ஒலி செய்ய,
  • விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர
    பொருந்திய சூரியனும், குளிர்ச்சி நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வர,
  • வினைகொள் நிசிசரர் பொடிபட
    தீச்செயலைக் கொண்ட அசுரர்கள் பொடிபட்டு அழிய,
  • அடல் செயும் வடிவேலா
    போர் செய்த கூர்மையான வேலாயுதனே.
  • மருது நெறு நெறு நெறு என முறிபட
    இரண்டு மருத மரஙகள் நெறு நெறு நெறு என்று முறிபடும்படி
  • உருளும் உரலொடு தவழ் அரி மருக
    உருண்டு சென்று (இடுப்பில் கட்டிய) உரலுடனே தவழ்ந்திட்ட கண்ணனாம் திருமாலின் மருகனே,
  • செவ் வனசம் மலர் சுனை புலி நுழை முழை உடைய
    செந்தாமரை மலர்கின்ற சுனையும், புலி நுழையும் குகையும் கொண்ட
  • விராலி மலையில் உறைகிற அறு முக குருபர
    விராலிமலையில் வீற்றிருக்கும் ஆறு முகனே, குருபரனே.
  • கயலும் மயிலையும் மகரமும் உகள்
    கயல் மீன்களும், மயிலை என்னும் மீன்களும், மகர மீன்களும் தாவித் திரிகின்ற
  • செ(ந்)நெல் வயலி நகரியில் இறையவ
    செந்நெல் வயல்களைக் கொண்ட வயலூர்ப் பதியில்* அமரும் இறைவனே,
  • அருள் தரு பெருமாளே.
    திருவருள் பாலிக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com