திருப்புகழ் 907 கமை அற்ற சீர் (வயலூர்)

தனதத்த தானான தனதத்த தானான
தனதத்த தானான ...... தந்ததான
கமையற்ற  சீர்கேடர்  வெகுதர்க்க  கோலாலர் 
களையுற்று  மாயாது  ......  மந்த்ரவாதக் 
கடைகெட்ட  ஆபாத  முறுசித்ர  கோமாளர் 
கருமத்தின்  மாயாது  ......  கொண்டுபூணுஞ் 
சமயத்த  ராசார  நியமத்தின்  மாயாது 
சகளத்து  ளேநாளு  ......  நண்புளோர்செய் 
சரியைக்ரி  யாயோக  நியமத்தின்  மாயாது 
சலனப்ப  டாஞானம்  ......  வந்துதாராய் 
அமரிற்சு  ராபான  திதிபுத்ர  ராலோக 
மதுதுக்க  மேயாக  ......  மிஞ்சிடாமல் 
அடமிட்ட  வேல்வீர  திருவொற்றி  யூர்நாதர் 
அருணச்சி  காநீல  ......  கண்டபார 
மமபட்ச  மாதேவ  ரருமைச்சு  வாமீநி 
மலநிட்க  ளாமாயை  ......  விந்துநாதம் 
வரசத்தி  மேலான  பரவத்து  வேமேலை 
வயலிக்குள்  வாழ்தேவர்  ......  தம்பிரானே. 
  • கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களை உற்று மாயாது
    பொறுமை இல்லாத ஒழுங்கீனர்களும், மிகுந்த தர்க்கம் பேசுகிற ஆடம்பர வாதிகளுமான மனிதர்களால் சோர்வு அடைந்து மடியாமலும்,
  • மந்த்ர வாத கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது
    மந்திர வாதம் செய்யும் மிக இழிவு நிலையில் உள்ள தாழ்மை வாய்ந்த சித்திரப் பேச்சு பேசி கொண்டாட்டம் போடுபவர்களின் செய்கைகளில் சிக்கி மடியாமலும்,
  • கொண்டு பூணும் சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது
    தங்கள் சமய நெறியை மேற் கொண்டு ஒழுகும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தோரின் கட்டுப்பாடுகளில் மடியாமலும்,
  • சகளத்து உளே நாளு(ம்) நண்பு உளோர் செய் சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது
    உருவ வழிபாடு செய்து நாள் தோறும் பக்தி வைத்துள்ளோர் புரியும் சரியை, கிரியை, யோகம்* எனப்படும் ஒழுக்கங்களை மேற் கொண்டு மடியாமலும்,
  • சலனப் படா ஞானம் வந்து தாராய்
    (அதனால்,) எவ்விதமான சஞ்சலங்களுக்கும் உட்படாத ஞானத்தை நீ எனக்குத் தந்தருளுக.
  • அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல்
    போரில் கள் குடிக்கும் (திதியின் மக்களாகிய) அசுரர்களின் அறியாமையானது உலகத்துக்குத் துக்கத்தையே தர, அந்தத் துக்கத்தை ஒழிக்க,
  • அடம் இட்ட வேல் வீர
    எப்போதும் துடித்துக் கொண்டிருக்கும் வேலினைச் செலுத்திய வீரனே,
  • திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் மம பட்ச மா தேவர் அருமைச் சுவாமீ
    திருவொற்றியூர் நாதரும், சிவந்த ஜடை, நீல கண்டம், பெருமை ஆகியவற்றைக் கொண்டவரும், என் மீது அன்புள்ளவருமான மகாதேவர் சிவபெருமானுக்கு அருமையாக வாய்ந்த சுவாமியே,
  • நிமல நிட்களா மாயை விந்து நாதம் வர சத்தி மேலான பர வத்துவே
    மாசில்லாதவனே, உருவம் இல்லாதவனே, மாயை, விந்து, நாதம், வரங்களைத் தரும் சக்தி இவைகளுக்கு மேம்பட்ட பரம் பொருளே**,
  • மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே.
    மேலை வயலூர்*** என்னும் தலத்தில் வாழ்கின்ற, தேவர்களின் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com