திருப்புகழ் 889 முகிலைக் காரை (திருநெய்த்தானம்)

தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன
தனனத் தானத் தனதன தனதன ...... தனதான
முகிலைக்  காரைச்  சருவிய  குழலது 
சரியத்  தாமத்  தொடைவகை  நெகிழ்தர 
முளரிப்  பூவைப்  பனிமதி  தனைநிகர்  ......  முகம்வேர்வ 
முனையிற்  காதிப்  பொருகணை  யினையிள 
வடுவைப்  பானற்  பரிமள  நறையிதழ் 
முகையைப்  போலச்  சமர்செயு  மிருவிழி  ......  குழைமோதத் 
துகிரைக்  கோவைக்  கனிதனை  நிகரிதழ் 
பருகிக்  காதற்  றுயரற  வளநிறை 
துணைபொற்  றோளிற்  குழைவுற  மனமது  ......  களிகூரச் 
சுடர்முத்  தாரப்  பணியணி  ம்ருகமத 
நிறைபொற்  பாரத்  திளகிய  முகிழ்முலை 
துவளக்  கூடித்  துயில்கினு  முனதடி  ......  மறவேனே 
குகுகுக்  கூகுக்  குகுகுகு  குகுவென 
திமிதித்  தீதித்  திமிதியென்  முரசொடு 
குழுமிச்  சீறிச்  சமர்செயு  மசுரர்கள்  ......  களமீதே 
குழறிக்  கூளித்  திரளெழ  வயிரவர் 
குவியக்  கூடிக்  கொடுவர  அலகைகள் 
குணலிட்  டாடிப்  பசிகெட  அயில்விடு  ......  குமரேசா 
செகசெச்  சேசெச்  செகவென  முரசொலி 
திகழச்  சூழத்  திருநட  மிடுபவர் 
செறிகட்  காளப்  பணியணி  யிறையவர்  ......  தருசேயே 
சிகரப்  பாரக்  கிரியுறை  குறமகள் 
கலசத்  தாமத்  தனகிரி  தழுவிய 
திருநெய்த்  தானத்  துறைபவ  சுரபதி  ......  பெருமாளே. 
  • முகிலைக் காரைச் சருவிய குழல் அது சரியத் தாமத் தொடை வகை நெகிழ் தர முளரிப் பூவைப் பனி மதி தனை நிகர் முகம் வேர்வ
    மேகத்தையும் இருளையும் கூடி நின்ற கூந்தலானது சரிந்து விழ, இடை அணியும் பூ மாலை வகைகளும் தளர்ந்து நெகிழ, தாமரை மலரையும் குளிர்ந்த சந்திரனையும் ஒத்த முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்ற,
  • முனையில் காதிப் பொரு கணையினை இள வடுவைப் பானல் பரிமள நறை இதழ் முகையைப் போலச் சமர் செய்யும் இரு விழி குழை மோத
    நுனியால் வெட்டுதல் போல முட்டுகின்றதும், போருக்கு உற்றதுமான அம்பை, இள மா வடுவை, கருங் குவளையை, நறுமணமும் தேனும் நிறைந்த தாமரை மொட்டின் இதழைப் போல் விளங்கி, போர் புரியும் இரண்டு கண்களும் காதில் உள்ள குண்டலங்களை மோத,
  • துகிரைக் கோவைக் கனி தனை நிகர் இதழ் பருகிக் காதல் துயர் அற வள நிறை துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களி கூர
    பவளத்தையும் கொவ்வைக் கனியையும் ஒத்த வாயிதழ் ஊறலை உண்டு காம வருத்தம் நீங்க, வளப்பம் நிறைந்த இரண்டு அழகிய தோள்களிலும் என் உள்ளம் உருகி நின்று மகிழ்ச்சி மிகுந்திட,
  • சுடர் முத்து ஆரப் பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை துவளக் கூடி துயில்கினும் உனது அடி மறவேனே
    ஒளி வீசும் முத்து மாலையாகிய ஆபரணத்தை அணிந்துள்ளதும், கஸ்தூரி நிறைந்ததும், அழகுள்ளதும் கனம் உள்ளதும், நெகிழ்ச்சி கொண்டதும், குவிந்து தோன்றும் மார்பகங்கள் துவட்சியுறும்படி (பொது மகளிருடன்) கூடித் தூங்கினாலும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன்.
  • குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர் செய்யும் அசுரர்கள் கள(ம்) மீதே
    (இவ்வாறான ஒலிகளுடன்) பறைகள் ஒன்று கூடிக் கோபத்தோடு முழங்க, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில்
  • குழறிக் கூளித் திரள் எழ வயிரவர் குவியக் கூடிக் கொடு வர அலகைகள் குணல் இட்டு ஆடிப் பசி கெட அயில் விடு குமரேசா
    கூச்சலிட்டு பெருங் கழுகுகளின் கூட்டம் கூட, அஷ்ட பைரவர்கள் ஒன்று கூடி வர, பேய்கள் கொக்கரித்து ஆரவாரத்துடன் ஆடி தம் பசியை ஆற்றிக் கொள்ள, வேலைச் செலுத்திய குமரேசனே,
  • செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழச் சூழத் திரு நடம் இடுபவர் செறி கண் காளப் பணி அணி இறையவர் தரு சேயே
    செகசெச் சேசெச் செக என்று பறைகள் இவ்வாறு ஒலியை எழுப்பி முழங்கித் தம்மைச் சூழத் திரு நடனம் செய்பவர், (செவி உணர்ச்சியும்) கூடிய, கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை அணியாகச் சூடிய சிவபெருமான் பெற்ற குழந்தையே,
  • சிகரப் பாரக் கிரி உறை குற மகள் கலசத் தாமத் தன கிரி தழுவிய திரு நெய்த் தானத்து உறைபவ சுரபதி பெருமாளே.
    சிகரங்களை உடையதும், பருத்துப் பாரமுள்ளதுமான (வள்ளி) மலையில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் குடம் போன்றதும், பூ மாலை அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களைத் தழுவியவனே, திருநெய்த்தானத்தில்* வீற்றிருப்பவனே, தேவர்கள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com