திருப்புகழ் 881 குடங்கள் நிரை (திருக்குரங்காடுதுறை)

தனந்த தனத்தான தனந்த தனத்தான
தனந்த தனத்தான ...... தனதான
குடங்கள்  நிரைத்தேறு  தடங்கள்  குறித்தார 
வடங்கள்  அசைத்தார  ......  செயநீலங் 
குதம்பை  யிடத்தேறு  வடிந்த  குழைக்காது 
குளிர்ந்த  முகப்பார்வை  ......  வலையாலே 
உடம்பு  மறக்கூனி  நடந்து  மிகச்சாறி 
யுலந்து  மிகக்கோலு  ......  மகலாதே 
உறங்கி  விழிப்பாய  பிறந்த  பிறப்பேனு 
முரங்கொள  பொற்பாத  ......  மருள்வாயே 
விடங்கள்  கதுப்பேறு  படங்க  ணடித்தாட 
விதங்கொள்  முதற்பாய  ......  லுறைமாயன் 
விலங்கை  முறித்தோடி  யிடங்கள்  வளைத்தேறு 
விளங்கு  முகிற்கான  ......  மருகோனே 
தடங்கொள்  வரைச்சாரல்  நளுங்கு  மயிற்பேடை 
தழங்கு  மியற்பாடி  ......  யளிசூழத் 
தயங்கு  வயற்சாரல்  குரங்கு  குதித்தாடு 
தலங்க  ளிசைப்பான  ......  பெருமாளே. 
  • குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்தார
    குடங்கள் வரிசையாக அமையப் பெற்றது போல விளங்கும் மார்பகங்களைக் கருத்தில் வைத்து, (ஆங்கே) முத்து மாலைகள் பொருந்த அசைத்த விலைமகளிருடைய
  • குதம்பை இடத்து ஏறு வடிந்த குழைக் காது(ம்) செய நீலம் குளிர்ந்த முகப் பார்வை வலையாலே
    செவிகள் இருக்கும் இடத்திலே விளக்கமுற்று நீண்ட குண்டலங்களை வெட்டுவது போலப் பாய்கின்ற, வெற்றி விளங்கும் நீலோற்பலம் போன்ற விழிப் பார்வை உடைய முகத் தோற்றம் என்னும் வலையாலே,
  • உடம்பும் அறக் கூனி நடந்து மிகச் சாறி உலந்து மிகக் கோலும் அகலாதே
    உடல் கெட்டுப் போய் மிகவும் கூன் அடைந்து, நடையும் ஒரேயடியாகச் சரிந்து, தோலும் மிகவும் வற்றி, கையில் கோலும் நீங்காமல்,
  • உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும் உரம் கொள பொன் பாதம் அருள்வாயே
    தூங்கி விழித்துக் கொண்டது போன்ற, (இப்போது) பிறந்துள்ள இந்தப் பிறப்பிலாவது திண்மை (ஞானம்) பெறும்படியாக அழகிய திருவடியை அருள்வாயாக.
  • விடங்கள் கதுப்பு ஏறு படங்கண் நடித்து ஆட அ(வ்)விதம் கொள் முதல் பாயல் உறை மாயன்
    நஞ்சு கன்னத்தில் ஏற காளிங்கனது படத்தின் மீது ஆடி நடித்தவனும், அத்தகைமை கொண்ட சிறந்த (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்பவனுமான திருமால்,
  • வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே
    சிவதனுசை அழகிய கையால் முறித்து, காட்டுக்குச் சென்று, தான் சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பாக்கி வைத்து விளங்கின மேக நிறமுடைய ராமனாகிய திருமாலுக்கு மருகனே,
  • தடம் கொள் வரைச் சாரல் நளுங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ
    நீர் நிலைகளைக் கொண்ட மலைச் சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பேடையும் ஒலி செய்யும்படியாக பாடி முரலும் வண்டுகள் சூழ,
  • தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே.
    விளங்கும் வயல் பக்கங்களைக் கொண்ட மலைச்சாரலில் குரங்குகள் குதித்து விளையாடும் (திருக்குரங்காடுதுறை* போன்ற) தலங்களில் மனம் உவந்து வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com