தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
தந்ததனத் தானதனத் ...... தனதான
இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு
எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே
கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக்
கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை
சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே
கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
- இந்துகதிர்ச் சேர்
சந்திர மண்டலத்தின்ஒளியைச் சென்று முட்டி - அருணப் பந்திநடுத் தூண் ஒளிபட்டு
அங்கு சிவந்து திரண்ட நடுத்தூண் போன்ற பாகத்தில் ஒளி பட்டு, - இன்பரசப் பால் அமுதச் சுவைமேவு
இன்பச்சுவை தரும் பால் போல் அமுதமான இனிமையை அனுபவித்து, - எண்குணமுற்றோன் நடனச் சந்த்ரவொளிப் பீடகம் உற்று
எண்குணங்கள்* கொண்ட இறைவன் நடனம் செய்யும் நிலவொளி வீசும் இடத்தைத் தரிசித்து, - எந்தை நடித் தாடு மணிச் சபையூடே
என் தந்தை நடராஜன் கூத்தாடும் அழகிய சபையின்கண், - கந்தம் எழுத்தோடு உறுசிற் கெந்தமணப் பூவிதழை
பெருமை மணம் கொண்ட ப்ரணவ எழுத்தோடு கூடிய ஞானம் என்ற இதழைக் கொண்ட வாசம்மிக்க மலரை - கண்டுகளித்தே யமுதக் கடல்மூழ்கி
அறிவால் அறிந்து ஆனந்தக் கடலில் மூழ்கி, - கந்தமதித்து ஆயிரவெட்டு அண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக்
கந்தனே, அந்த நறுமணத்தைப் போற்றிச் செய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வளைத்துள்ள பதினான்கு உலகப் பகுதிகளையும் - காணஎனக்கருள்வாயே
நான் காணும்படியாக எனக்கு நீ அருள்புரிவாயாக. - திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என
(இந்த தாளத்துக்கு ஏற்ப) - காளமணித் தவிலோசை
எக்காளமும், மணியும், தவிலும் ஓசையிட, - சிந்தைதிகைத்து ஏழுகடற் பொங்க
அசுரர்களின் மனம் திகைக்கும்படியாக ஏழு கடல்களும் பொங்க, - அரிச் சூர்மகுடச் செண்டுகுலைத்தாடு
சிங்கம் போன்ற சூரனின் மணிமுடியில் உள்ள பூச்செண்டைத் தள்ளி அழித்து விளையாடும் - மணிக் கதிர்வேலா
அழகிய ஒளி வீசும் வேலாயுதனே, - குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களப
மொய்க்கும் வண்டுகள் விரும்பும் துளசிமாலையை அணிந்தவனும், சிவந்த லக்ஷ்மியை மணந்தவனும், சந்தனக்கலவையைப் பூசுபவனும், - கொண்டல்நிறத்தோன்மகளை
மேகவண்ணனுமான திருமாலின் மகளாகிய வள்ளியை - தரைமீதே கும்பிடகைத் தாளமெடுத்து
இந்த உலகில் கும்பிடும்பொருட்டு கைத்தாளம் போட்டுக்கொண்டு, - அம்பொனுருப் பாவைபுகழ்
அழகிய லக்ஷ்மியின் வடிவம்கொண்ட பாவை வள்ளியைப் புகழ்ந்து போற்றியவனே, - கும்பகொணத்து ஆறுமுகப் பெருமாளே.
கும்பகோணத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.