தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
சத்திக் கச்சில தித்திக் கப்படும் ...... அன்புபேசித்
தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டையூறல்
கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ...... கின்றதோதான்
கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ...... தம்பெறேனோ
முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ...... அம்புராசி
முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ...... டங்கல்வீரா
அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ...... கொண்டநாதா
அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே.
- தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்கச் சில
தித்திக்கப்படும் அன்பு பேசி
வில்லைப் போன்ற நெற்றியில் வியர்வை உண்டாக, கண்கள் மயங்கிக் குழியிட்டுச் சுருங்க, வளையல்கள் சப்திக்க, சில இனிமையான காமப் பேச்சுக்களைப் பேசி, - தழுவிய மகளிர் தம் முகிழ் முலை உரம் மிசை தைக்கச்
சர்க்கரை கைக்கப்பட்டன தொண்டை ஊறல்
தழுவுகின்ற விலைமாதர்களின் அரும்பு போன்ற மார்பினை மார்போடு பொருந்த, சர்க்கரையும் கசக்கின்றது என்று சொல்லுமாறு இனிக்கும் வாயிதழ் ஊறலை - கனவிலு(ம்) நுகர் தரு கலவியின் வலை இடை கட்டுப்பட்டு
உயிர் தட்டுப் பட்டு அழிகின்றதோ தான்
கனவிலும் பருகும் புணர்ச்சி என்னும் வலையில் நான் வசப்பட்டு, உயிர் சிக்கிக் கொண்டு அழிந்து போவது தான் நன்றோ? - கதி பெற விதி இலி மதி இலி உனது இரு கச்சு உற்றச் சிறு
செச்சைப் பத்ம பதம் பெறேனோ
நற் கதி பெறுவதற்கான நல்ல விதிப் பயன் இல்லாதவன் நான். அதற்கான புத்தியும் இல்லாதவன். உன்னுடைய இரண்டு கால் பட்டிகை பொருந்திய சிறிய வெட்சி பூக்கள் பூண்ட தாமரை போன்ற திருவடியைப் பெற மாட்டேனோ? - முனை மலி குலிசை தன் ம்ருகமத புளகித முத்தச் சித்ர
தனத்துக்கு இச்சித
கூர்மை மிகுந்துள்ள வஜ்ராயுதனாகிய இந்திரன் மகளான தேவயானையின் கஸ்தூரி அணிந்ததும், புளகம் கொண்டதும், முத்து மாலை புனைந்ததும், அழகானதுமான மார்பின் மீது ஆசை கொண்டவனே, - அம்புராசி முறை இட முது நிசிசரர் திரள் முதுகு இட முட்டப்
பொட்டு எழ வெட்டிக் குத்தும் அடங்கல் வீரா
கடல் ஓலமிடவும், வலிமையில் முதிர்ந்த அசுரர்களின் கூட்டம் போர்க்களத்திலிருந்து பின்னிட்டு ஓடவும், யாவுமே பொடியாகவும் வெட்டிக் குத்திய சிங்க வீரனே, - அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு
அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா
ஞான அனுபவங்களைக் கொடுக்க வல்லதாய் உள்ள ஒப்பற்ற ஓங்காரப் பொருளை, தந்தையாகிய சிவபெருமானுக்கு அருமையான வகையில் உபதேசித்து, அவரால் பூஜிக்கப்பட்ட தலைவனே, - அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்துப் பொற்பு
உறு சித்திச் சித்தர்கள் தம்பிரானே.
உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அழிந்தாலும் நிலைத்து நிற்கும் திரி புவனம்* என்னும் தலத்தில் அழகுடன் விளங்குபவனே, சித்திகளில் வல்ல சித்தர்களுக்கு எல்லாம் தம்பிரானே.