தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச ...... மலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க ...... புகழ்கூறித்
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த ...... குகவேல
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழந டஞ்செய் ...... கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு ...... மருகோனே
வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்த ...... முருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள் ...... பெருமாளே.
- இருவினை யஞ்ச
ஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக, - வருவினை கெஞ்ச
இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக, - இருள்பிணி துஞ்ச
இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக, - மலம் மாய
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய, - எனதிடர் மங்க
எனது துயரமெல்லாம் குறைந்துபோக, - உனதருள் பொங்க
உனது திருவருள் பெருக, - இசைகொடு துங்க புகழ்கூறி
இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி, - திருமுக சந்த்ர
சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே, - முருக கடம்ப சிவசுத கந்த
முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா, - குகவேல சிவசிவ என்று
குகா, வேலா, சிவசிவ என்று கூறி - தெளிவுறு நெஞ்சு திகழ
அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக - ந டஞ்செய் கழல்தாராய்
நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய். - மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு
மருதமரம், கம்சன் இவர்களது உயிரை மாய்த்து - மகிழரி விண்டு மருகோனே
மகிழ்ந்த ஹரி விஷ்ணுவின் மருமகனே, - வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
உயிர்களைக் கொன்ற அசுரர்கள் ஒடுங்க - வலம்வரு செம்பொன் மயில்வீரா
வெற்றிவலம் வந்த செம்பொன் மயில்வீரனே, - அருகுறு மங்கை யொடு
அருகில் தன் பாகத்தில் அமர்ந்த பார்வதியுடன் - விடை யுந்தும் அமலனுகந்த
ரிஷபவாகனம் ஏறும் அமலபிரான் சிவன் விரும்பும் - முருகோனே
முருகப் பெருமானே, - அருள்செறி பந்த ணையில்
அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் தலத்தில் - இரு மங்கை அமளிந லங்கொள் பெருமாளே.
வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடனும் மலர்ப்படுக்கையில் இன்புறும் பெருமாளே.