தனத்த தத்தன தானா தானன
தனத்த தத்தன தானா தானன
தனத்த தத்தன தானா தானன ...... தனதான
கருத்தி தப்படு காமா லீலைகள்
விதத்தை நத்திய வீணா வீணிகள்
கவட்டு விற்பன மாயா வாதிகள் ...... பலகாலுங்
கரைத்து ரைத்திடு மோகா மோகிகள்
அளிக்கு லப்பதி கார்போ லோதிகள்
கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு ...... வினையேனை
உரைத்த புத்திகள் கேளா நீசனை
யவத்த மெத்திய ஆசா பாசனை
யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை ...... யருளாகி
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
யளிக்கு நற்பொரு ளாயே மாதவ
வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை ...... யருள்வாயே
செருக்கி வெட்டிய தீயோ ராமெனு
மதத்த துட்டர்கள் மாசூ ராதிய
சினத்தர் பட்டிட வேவே லேவிய ...... முருகோனே
சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்
கதித்த முத்தமிழ் மாலா யோதிய
செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா
வரைத்த வர்க்கரர் சூலா பாணிய
ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த
மனத்தி யற்படு ஞானா தேசிக ...... வடிவேலா
வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு
தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு
மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
- கருத்து இதப் படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா
வீணிகள்
மனத்துக்கு இனிமை வாய்க்கும்படி பல விதமான காம லீலைகளை விரும்பிய மகா வீணிகள். - கவட்டு விற்ப(ன்)ன மாயா வாதிகள் பல காலும் கரைத்து
உரைத்திடு மோகா மோகிகள்
வஞ்சக அறிவுடையவராய், மயக்கம் ஊட்டத் தக்க பேச்சினை உடையவர்கள். பல முறையும் மனம் கரையும்படி பேச வல்ல மோகம் மிகக் கொண்டவர்கள். - அளிக் குலப் பதி கார் போல் ஓதிகள் கடைக் க(ண்)ணின்
சுழலாயே பாழ் படு வினையேனை
வண்டினக் கூட்டங்கள் வந்து படிகின்ற கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின் கடைக் கண் மயக்கில் பட்டுச் சுழலுதலாகி, பாழாகப் போகின்ற வினைக்கு ஈடான என்னை, - உரைத்த புத்திகள் கேளா நீசனை அவத்த(ம்) மெத்திய ஆசா
பாசனை உ(ள்)ளத்தில் மெய்ப் பொருள் ஓரா மூடனை
அருளாகி
பெரியோர்கள் சொன்ன புத்திமதிகளைக் கேளாத இழிந்தோனான என்னை, பயனற்றவையே மிகுந்த ஆசைகளில் பற்று உடையவனாகிய என்னை, மனதில் உண்மைப் பொருள் இன்னது என ஆராயாத மூடனை, உன் திருவருளைப் பெற்றவனாக்கி, - உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல் பொருள்
ஆயே மாதவ உணர்ச்சி பெற்றிடவே நீ தாளிணை
அருள்வாயே
உயர்ச்சி பெற்ற, மேலான வேதத்தில் குறிக்கப் பெற்ற, நல்ல பிள்ளையாக்கி, சிறந்த தவ ஞானத்தைப் பெறுமாறு உனது திருவடிகளைத் தந்தருள்வாயே. - செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் மா
சூர் ஆதிய சினத்தர் பட்டிடவே வேல் ஏவிய முருகோனே
கர்வம் கொண்டு, பகைவர்களை வெட்டி அழித்த, பொல்லாதவர்கள் என்று சொல்லப்பட்ட, மதம் கொண்ட துஷ்டர்களாகிய பெரிய சூரன் முதலான கோபம் கொண்ட அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, - சிவத்தை உற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய்
ஓதிய செழிப்பை நத்திய சீலா வீறிய மயில் வீரா
சிவமங்களம் பொருந்திய பரிசுத்த மூர்த்தியே, பெரியோர்கள் அருளிய முத்தமிழ்ப் பாக்களை அன்புடன் ஓதுகின்ற வளத்தை விரும்புகின்ற சீலனே, மேம்பாடுடன் விளங்கும் மயில் வீரனே, - வரைத் தவர்க்கு அரர் சூலா பாணியர் அதிக் குணத்து அரர்
தீரா தீரர் தம் மனத்து இயல் படு ஞானா தேசிக வடிவேலா
கயிலை மலையில் வீற்றிருக்கும் தவத்தினருக்கும் இறைவனாகிய பெரியோர், சூலாயுதத்தைக் கையில் கொண்டவர், மேம்பட்ட குணத்தை உடைய தலைவர், மிகக் தைரியம் உள்ளவர் ஆகிய சிவபெருமானுடைய மனத்தில் பொருந்தி விளங்கும் ஞான தேசிக மூர்த்தியே, வடிவேலனே, - வருக்கையின் கனி சாறாய் மேலிடு தழைத்த செய்த்தலை
ஊடே பாய் தரு மருத்துவக் குடி வாழ்வே தேவர்கள்
பெருமாளே.
பலாப் பழங்களின் சாறாகி மேலிட்டுத் தளைத்த வயல்களின் நடுவில் பாய்கின்ற மருத்துவக் குடியில்* வாழ்கின்ற செல்வமே, அமரர்களின் பெருமாளே.