திருப்புகழ் 848 சொற்பிழை வராமல் (திருவாவடுதுறை)

தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான
சொற்பிழைவ  ராம  லுனைக்கனக்  கத்துதித்து 
நிற்பதுவ  ராத  பவக்கடத்  திற்சுழற்றி 
சுக்கிலவ  தார  வழிக்கிணக்  கிக்களித்து  ......  விலைமாதர் 
துப்பிறைய  தான  இதழ்க்கனிக்  குக்கருத்தை 
வைத்துமய  லாகி  மனத்தைவிட்  டுக்கடுத்த 
துற்சனம  காத  கரைப்புவிக்  குட்டழைத்த  ......  நிதிமேவு 
கற்பகஇ  ராச  னெனப்படைக்  குப்பெருத்த 
அர்ச்சுனந  ராதி  யெனக்கவிக்  குட்பதித்து 
கற்றறிவி  னாவை  யெடுத்தடுத்  துப்படித்து  ......  மிகையாகக் 
கத்திடுமெ  யாக  வலிக்கலிப்  பைத்தொலைத்து 
கைப்பொருளி  லாமை  யெனைக்கலக்  கப்படுத்து 
கற்பனைவி  டாம  லலைத்திருக்  கச்சலிக்க  ......  விடலாமோ 
எற்பணிய  ராவை  மிதித்துவெட்  டித்துவைத்து 
பற்றியக  ராவை  யிழுத்துரக்  கக்கிழித்து 
எட்கரிப  டாம  லிதத்தபுத்  திக்கதிக்கு  ......  நிலையோதி 
எத்தியப  சாசின்  முலைக்குடத்  தைக்குடித்து 
முற்றுயிரி  லாம  லடக்கிவிட்  டுச்சிரித்த 
யிற்கணையி  ராமர்  சுகித்திருக்  கச்சினத்த  ......  திறல்வீரா 
வெற்பெனம  தாணி  நிறுத்துருக்  கிச்சமைத்து 
வர்க்கமணி  யாக  வடித்திருத்  தித்தகட்டின் 
மெய்க்குலம  தாக  மலைக்கமுத்  தைப்பதித்து  ......  வெகுகோடி 
விட்கதிர  தாக  நிகர்த்தொளிக்  கச்சிவத்த 
ரத்தினப  டாக  மயிற்பரிக்  குத்தரித்து 
மிக்கதிரு  வாவ  டுநற்றுறைக்  குட்செழித்த  ......  பெருமாளே. 
  • சொல் பிழை வராமல் உனைக் கனக்கத் துதித்து நிற்பது வராத பவக் கடத்தில் சுழற்றி
    துதிக்கும் சொற்களில் பிழை ஒன்றும் வராமல் உன்னை நிரம்பத் துதி செய்து வணங்கி நிற்பது என்பதே இல்லாத பிறவியாகிய காட்டில் சுழன்று,
  • சுக்கில அவதார வழிக்கு இணக்கிக் களித்து விலைமாதர் துப்பு இறையதான இதழ்க் கனிக்குக் கருத்தை வைத்து
    இந்திரியம் மூலமாக பிறப்பு எடுக்கின்ற வழியில் இணங்கிப் பொருந்தி மகிழ்ச்சி பூண்டு, விலைமாதர்களின் பவளம் தங்குவது போன்ற வாயிதழின் ஊறலாகிய பழத்தின் ருசியில் என் எண்ணங்களை வைத்து,
  • மயலாகி மனத்தை விட்டுக் கடுத்த துற்சன மகாதகரை புவிக்குள் தழைத்த நிதி மேவு கற்பக இராசன் எனப் படைக்குப் பெருத்த அர்ச்சுன நராதி எனக் கவிக்குள் பதித்து
    ஆசை மயக்கம் கொண்டு மனதைக் காமத்தில் முழுவதும் செலுத்தி, பொல்லாத துர்க்குணம் உடைய பெரும் கொடியவர்களை, இந்தப் பூமியில் வளப்பம் பொருந்தி செல்வம் நிறைந்த கற்பகத் தரு போன்ற அரசனே (நீ) என்றும், படையில் மிகச் சிறந்த அர்ச்சுன அரசன் (நீ) என்றும் கவிகளில் அமைத்து,
  • கற்று அறி வினாவை எடுத்து அடுத்துப் படித்து மிகையாகக் கத்திடும் மெய் ஆக வலிக் கலிப்பைத் தொலைத்து
    கற்று அறிந்த சொற்களைப் பொறுக்கி எடுத்து அந்த மனிதர்களை நெருங்கிப் போய் அவர்கள் மீது நான் அமைத்த கவிகளைப் படித்து, அளவுக்கு மிஞ்சி கூச்சலிடும் உடலைக் கொண்டவனாய், வன்மை கொண்ட பொலிவை இழந்து,
  • கைப்பொருள் இலாமை எனைக் கலக்கப் படுத்து கற்பனை விடாமல் அலைத்து இருக்கச் சலிக்க விடலாமோ
    (வேசையருக்குத் தர) கையில் பொருள் இல்லாத காரணத்தால் என்னைக் கலக்கமுறச் செய்யும் கற்பனைக் கவிதைகளில் இடைவிடாமல் நான் அலைச்சல் உறும்படியும் சலிப்புறும்படியும் கை விடலாமோ?
  • எல் பணி அராவை மிதித்து வெட்டித் துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்கக் கிழித்து
    ஒளி பொருந்திய படத்தை உடைய பாம்பின் (காளிங்கனின்) தலையில் (நடனமாடி காலால்) மிதித்து வெட்டிக் கலக்கி, (கஜேந்திரனாகிய) யானையைப் பற்றி இழுத்த முதலையை வெளியே இழுத்து (தன் சக்ராயுதத்தால்) பலமாகக் கிழித்து,
  • எள் கரி படாமல் இதத்த புத்திக் கதிக்கு நிலை ஓதி எத்திய பசாசின் முலைக் குடத்தைக் குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டுச் சிரித்த
    அவமதிப்புக்கு இடமான யானை (முதலையின் வாயில்) படாமல், இன்பம் தரக்கூடிய முக்தி நிலைக்கான உறுதிப் பொருளை அதற்குச் சொல்லி, (விஷப்பால் தரும்) வஞ்சனை எண்ணத்துடன் வந்த பூதனை என்ற ராட்சசியின் முலைக் குடத்தை உறிஞ்சிக் குடித்து முழுதும் உயிர் இல்லாத வகையில் (அந்தப் பிசாசை) அடக்கி விட்டு நகைத்த (கண்ணனாகவும்),
  • அயில் கணை இராமர் சுகித்து இருக்கச் சினத்த திறல் வீரா
    கூரிய அம்பைக் கொண்ட ராமராகவும் வந்த திருமால் சுகமாக இருக்கும்படி (சூரன் முதலியோரைக்) கோபித்த வலிமை உடைய வீரனே,
  • வெற்பு என மதாணி நிறுத்து உருக்கிச் சமைத்து
    மலை என்னும்படியாக பொன் பதக்கம் ஒன்றை எடை போட்டு, அதனை உருக்கி உருவமாகச் செய்து,
  • வர்க்க மணியாக வடித்து இருத்தித் தகட்டின் மெய்க் குலம் அதாக மலைக்க முத்தைப் பதித்து
    பல வகையான ரத்தினங்களைப் பொறுக்கி எடுத்து அமைத்து, பொன் தகட்டினுடைய சரியான கூட்டம் என்று அனைவரும் பிரமிக்கும்படிச் செய்து, அதில் முத்தைப் பதிக்கச் செய்து,
  • வெகு கோடி விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்கச் சிவத்த ரத்தின படாக(ம்) மயில் பரிக்குத் தரித்து
    பல கோடி சூரியனுடைய ஒளி கூடியது போல ஒளி வீசிச் சிவந்த ரத்தினத் திரைச் சீலை கொண்டது போன்ற உடலை உடைய குதிரை போன்ற மயில் வாகனத்தின் மீது அமர்ந்து,
  • மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே.
    மிகச் சிறந்த திருவாவடுதுறை* என்னும் நல்ல பதியில் வளப்பமுற்று விளங்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com