திருப்புகழ் 845 முகர வண்டெழு (திருப்பெருந்துறை)

தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான
முகர  வண்டெழுங்  கருமுகி  லலையவு 
முதிய  நஞ்சுமிழ்ந்  தயில்விழி  குவியவு 
முகிள  சந்திரன்  பொருநுதல்  வெயரவு  ......  மமுதூறும் 
முருகு  தங்குசெந்  துகிரிதழ்  தெரியவு 
மருவு  சங்கநின்  றொலிகொடு  பதறவு 
முழுது  மன்புதந்  தமளியி  னுதவிய  ......  அநுராகச் 
சிகர  கும்பகுங்  குமபுள  கிததன 
மிருபு  யம்புதைந்  திடநடு  விடைவெளி 
தெரிய  லின்றியொன்  றிடவுயி  ருயிருட  ......  னுறமேவித் 
திமிர  கங்குலின்  புதவிடு  மவசர 
நினைவு  நெஞ்சினின்  றறவவர்  முகமது 
தெரிச  னஞ்செயும்  பரிவற  இனியருள்  ......  புரிவாயே 
மகர  நின்றதெண்  டிரைபொரு  கனைகடல் 
மறுகி  யஞ்சிவந்  தடிதொழு  திடவொரு 
வடிகொள்  செஞ்சரந்  தொடுபவ  னிருபது  ......  புயவீரன் 
மடிய  வங்குசென்  றவனொரு  பதுமுடி 
முடிய  முன்புமண்  டமர்பொரு  தமர்நிழல் 
மதிலி  லங்கையும்  பொடிபட  அருளரி  ......  மருகோனே 
நிகரி  லண்டமெண்  டிசைகளு  மகிழ்வுற 
விரகு  கொண்டுநின்  றழகுறு  மயில்மிசை 
நினைவி  னுந்தியம்  புவிதனை  வலம்வரு  ......  மிளையோனே 
நிலவ  ரும்புதண்  டரளமு  மிளிரொளிர் 
பவள  மும்பொரும்  பழனமு  மழகுற 
நிழல்கு  ருந்தமுஞ்  செறிதுறை  வளர்வுறு  ......  பெருமாளே. 
  • முகர வண்டு எழும் கரு முகில் அலையவு(ம்) முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவு(ம்) முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும் முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவு(ம்)
    ஒலி செய்யும் வண்டுகள் எழுந்து மொய்க்கும் கரிய மேகம் போன்ற கூந்தல் அலைச்சல் உறவும், முற்றிய விஷத்தைக் கக்கும் அம்பு போன்ற கண்கள் குவியவும், அரும்பு மலரும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியில் வியர்வை எழவும், அமுதம் ஊறுகின்ற, நறுமணம் தங்கும் செவ்விய பவளம் போன்ற வாயிதழ் தெரியவும்,
  • மருவு சங்க(ம்) நின்று ஒலி கொடு பதறவு(ம்) முழுது அன்பு தந்து அமளியின் உதவிய அநுராகச் சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட
    பொருந்திய சங்கு போன்ற கழுத்திலிருந்து வெளிப்படும் (புட்குரல்) ஒலியோடு பதறிடவும், முழு அன்பையும் தந்து படுக்கையில் காட்டிய காமப் பற்றுக்கு இடமானதும், மலை போன்றதும், குடம் போன்றதும், குங்குமம் பூசியதும், புளகிதம் கொண்டதுமான மார்பகங்கள் இரண்டு புயங்களிலும் அழுந்திடவும்,
  • நடு இடைவெளி தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவித் திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற
    மத்தியில் வெளியிடம் தெரியாத வண்ணம் ஒருவரை ஒருவர் அணைந்திட, உயிரும் உயிரும் கலந்து பொருந்தக் கூடி, இருண்ட இரவில் கலவி இன்பத்தைத் தந்து உதவிடும் சமயங்களின் ஞாபகம் மனதிலிருந்து ஒழிந்து போகவும்,
  • அவர் முகம் அது தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள் புரிவாயே
    (அந்த விலைமாதர்களின்) முகத்தை தரிசனம் செய்ய விரும்பும் ஆசை ஒழிந்து போகவும் இனி எனக்கு அருள் புரிவாயாக.
  • மகர(ம்) நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு வடி கொள் செம் சரம் தொடுபவன்
    மகர மீன்கள் உள்ள, தெள்ளிய அலைகள் மோதும், ஒலிக்கும் கடல் (சமுத்திரராஜன்) கலக்கத்துடன் பயந்து வந்து திருவடியில் தொழுது வணங்கும்படி ஒரு கூர்மையான செவ்விய அம்பைச் செலுத்தியவனும்,
  • இருபது புய வீரன் மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே
    இருபது புயங்களைக் கொண்ட வீரன் (ராவணன்) இறக்க, இலங்கைக்குப் போய் அவனுடைய ஒரு பத்து தலைகளும் அழிபட முன்பு நெருங்கி போரைச் செய்த, ஒளி பொருந்திய மதில் சூழ்ந்த இலங்கைப் பட்டினம் பொடிபட அருளிய திருமாலின் மருகனே,
  • நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழ் உற விரகு கொண்டு நின்று அழகு உறு மயில் மிசை நினைவின் உந்தி அம் புவி தனை வலம் வரும் இளையோனே
    ஒப்பில்லாத அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்ளவும் சாமர்த்தியத்துடன் ஏறி நின்று அழகு பொருந்திய மயிலில் மனோ வேகத்தைக் காட்டிலும் அதி வேகமாகச் செலுத்தி, அழகிய பூலோகத்தை வலம் வந்த இளையோனே,
  • நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகு உற நிழல் குருந்தமும் செறி துறை வளர் உறு பெருமாளே.
    நிலவொளி போல் வெள்ளொளி வீசும் குளிர்ந்த முத்துக்களும் விளங்கி, ஒளி தரும் பவளமும் கலந்து இலங்கும் வயல்கள் அழகு தர, நிழல் தரும் குருந்த மரமும் நிறைந்த திருப் பெருந்துறையில்* விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com