தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத் ...... தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத் ...... தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாய்மார் நேசத் ...... துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
சாதே யேசத் ...... தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற் ...... புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப் ...... புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
- பாலோ தேனோ பாகோ
நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ? - வானோர் பாராவாரத்து அமுதேயோ
தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? - பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ
நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ? - பானோ வான்முத்தென
பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம் - நீளத் தாலோ தாலேலோ பாடாதே
விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும், - தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே
தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும், - பேர் ஈயாதே பேசாதே
புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும், - ஏசத் தகுமோதான்
ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ? - ஆலோல் கேளா மேலோர் நாள்
வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில், - மால் ஆனாது ஏனற்புனமேபோய்
ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, - ஆயாள் தாள்மேல் வீழா வாழா
அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும், - ஆளா வேளைப்புகுவோனே
அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே, - சேலோடே சேர் ஆரால் சாலார்
சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள - சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சீர்பெற்ற திருவாரூர்* தலத்தின் பெருஞ் செல்வமே, - சேயே வேளே பூவே கோவே
இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே, - தேவே தேவப்பெருமாளே.
இறைவனே, தேவர்களின் பெருமாளே.



