தனன தத்தன தனதன தனன தத்தன தனதன
தனன தத்தன தனதன ...... தனதான
முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்
முறைம சக்கிகள் திருடிகள் ...... மதவேணூல்
மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை
முகமி னுக்கிகள் கசடிகள் ...... இடையேசூழ்
கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம ளியின்மிசை
கனியி தழ்ச்சுருள் பிளவிலை ...... யொருபாதி
கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி
கவலை யற்றிட நினதருள் ...... புரிவாயே
அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்
அணிக ழுப்பெற நடவிய ...... மயில்வீரா
அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
அவர வர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே
சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
திருவி னைப்புண ரரிதிரு ...... மருகோனே
திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்
திருவி டைக்கழி மருவிய ...... பெருமாளே.
- முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள்
முறை மசக்கிகள் திருடிகள்
எப்போதும் தங்கள் மார்பகத்தைக் குலுக்குபவர்கள். வஞ்சனை மனம் உடையவர். வடித்து எடுக்கப்பட்ட இழிந்தவர்கள். முட்டாள்கள். உறவு முறை கூறி மயங்கச் செய்பவர்கள். திருடிகள். - மதவேள் நூல் மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள்
தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் கலை
நெகிழ்த்திகள்
மன்மதனுடைய காம நூலில் கூறியவாறு பேச்சினால் ஏய்ப்பவர்கள். செருக்கு உடையவர். சிணுங்கி அழுகின்ற மனத்தை உடையவர்கள். தக்க சிரிப்புடன் முகத்தை மினுக்குபவர்கள். குற்றம் உடையவர்கள். இடுப்பில் சூழ்ந்துள்ள ஆடையைத் தளர்த்தி விடுபவர்கள். - இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ்ச்
சுருள் பிளவு இலை ஒரு பாதி கலவியில் தரும் வசவிகள் விழி
மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்
புரிவாயே
இளைஞர்களின் பொருளை அபகரித்து, படுக்கையில் கனி போன்ற தங்கள் வாயிதழில் உள்ள சுருள் பாக்கு வெற்றிலையில் ஒரு பாதியை புணர்ச்சி நேரத்தில் கொடுக்கும் கெட்ட நடத்தை உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) கண் மயக்கில் நான் வசம் அழியும் கவலை என்னை விட்டு ஒழிய உன் திருவருளைப் புரிவாயாக. - அலை நெருப்பு எழ வட வரை பொடிபட சமணர்கள் குலம்
அணி கழுப் பெற நடவிய மயில் வீரா
கடல் தீப்பிடிக்க, வடக்கிலுள்ள (கிரவுஞ்ச) மலை பொடியாக, சமணர்களின் கூட்டம் வரிசையாக அமைக்கப்பட்ட கழுமரங்களில் ஏற (திருஞான சம்பந்தராக வந்து) நடத்திய மயில் வீரனே, - அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும் வர அவர்
அவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே
அரன், திருமால், பிரமன் மூவரும் முன்பு வழிபட்டுப் போற்ற, அவர்கள் மேல் மிக்க அன்பு பூண்டு அவரவர்க்கு ஒப்பற்ற ஒரு பிரணவப் பொருளை உபதேசித்த பெரியவனே, - சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள்
திருவினைப் புணர் அரி திரு மருகோனே
(சிவதனுசு ஆகிய) வில் மொளுக்கென்று முறிந்து விழ, மிதிலை நகரில் ஜனகன் ஆகிய அரசன் அருளிய லக்ஷ்மி போன்ற சீதையை மணந்த (ராமன்) திருமாலின் அழகிய மருகனே, - திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர்
திருவிடைக்கழி மருவிய பெருமாளே.
திரண்டுள்ள பலா, கமுகு மரங்கள் சொரிகின்ற தேன், வாழை இவை எல்லாம் வளர்கின்ற திருவிடைக்கழி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.