திருப்புகழ் · 798மருக்குலாவிய (திருவிடைக்கழி)

தனத்த தானன தனதன ...... தனதான

Thiruppugazh Anbargal

மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.

பத உரை

  • மருக்கு லாவிய மலரணை
    நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை
  • கொதியாதே
    (விரகத்தின் காரணமாக) கொதித்துச் சூடு தராமலும்,
  • வளர்த்த தாய்தமர்
    வளர்த்த தாயும் சுற்றத்தாரும்
  • வசையது மொழியாதே
    வசை மொழிகளைப் பேசாமலும்,
  • கருக்கு லாவிய அயலவர்
    காரணமாக (கருவைத்து) நட்பு கொண்டாடிய அயலார்கள்
  • பழியாதே
    பழிச் சொல் கூறாமலும் (இருக்க வேண்டுமானால்)
  • கடப்ப மாலையை யினி
    உன் (அடையாளமாய்) கடம்ப மாலையை இனி
  • வரவிடவேணும்
    அனுப்பி வைக்க வேண்டும்.
  • தருக்கு லாவிய
    கற்பக விருட்சத்தின் கீழ் வளர்ந்த,
  • கொடியிடை மணவாளா
    கொடிபோன்ற இடையை உடைய தேவயானையின் மணவாளனே,
  • சமர்த்த னேமணி மரகத மயில்வீரா
    சாமர்த்தியசாலியே, மரகத மணியின் நிறம் கொண்ட மயில்மீது வரும் வீரனே,
  • திருக்கு ராவடி நிழல்தனில்
    திருவிடைக்கழியில் உள்ள திருக்குராமரத்தின் அடிநிழல் தன்னில்
  • உறைவோனே
    வீற்றிருப்பவனே,
  • திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே.
    திருக்கையில் வேல் ஏந்திய, வடிவம் அழகிய பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
  • * Thiruvidaikkazhi is 17 miles southeast of MayilAduthurrai (MAyUram) - near Thirukkadaiyur. Murugan is cosily seated under a KurA tree in this place.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout