திருப்புகழ் 795 படி புனல் நெருப்பு (திருவிடைக்கழி)

தனனதன தத்தனத் தனனதன தத்தனத்
தனனதன தத்தனத் ...... தனதான
படிபுனல்நெ  ருப்படற்  பவனம்வெளி  பொய்க்கருப் 
பவமுறைய  வத்தைமுக்  ......  குணநீடு 
பயில்பிணிகள்  மச்சைசுக்  கிலமுதிர  மத்திமெய்ப் 
பசிபடுநி  ணச்சடக்  ......  குடில்பேணும் 
உடலது  பொ  றுத்தறக்  கடைபெறுபி  றப்பினுக் 
குணர்வுடைய  சித்தமற்  ......  றடிநாயேன் 
உழலுமது  கற்பலக்  கழலிணையெ  னக்களித் 
துனதுதம  ரொக்கவைத்  ......  தருள்வாயே 
கொடியவொரு  குக்குடக்  கொடியவடி  விற்புனக் 
கொடிபடர்பு  யக்கிரிக்  ......  கதிர்வேலா 
குமரசம  ரச்சினக்  குமரவணி  யத்தன்மெய்க் 
குமரமகிழ்  முத்தமிழ்ப்  ......  புலவோனே 
தடவிகட  மத்தகத்  தடவரைய  ரத்தரத் 
தடலனுச  வித்தகத்  ......  துறையோனே 
தருமருவு  மெத்தலத்  தருமருவ  முத்தியைத் 
தருதிருவி  டைக்கழிப்  ......  பெருமாளே. 
  • படி புனல் நெருப்பு அடற் பவனம் வெளி
    மண், நீர், தீ, வலிமை கொண்ட வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள்,
  • பொய்க்கருப் பவமுறை யவத்தை
    பொய், கருவிலே பிறப்பு கூடும் அவஸ்தை,
  • முக் குண
    ாத்வீகம், ராஜ ம், தாமதம் என்ற முக்குணங்கள்,
  • நீடு பயில்பிணிகள்
    வெகு காலமாய்க் கூடிவரும் நோய்கள்,
  • மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி
    மூளை, ஜீவதாது, ரத்தம், எலும்பு,
  • மெய்ப் பசி படுநிணம்
    உடலில் தோன்றும் பசி, உள்ளிருக்கும் மாமிசம் இவை யாவும் கூடிய
  • சடக் குடில்பேணும்
    அறிவற்ற சிறு குடிசையைப் பெரிதெனப் போற்றி
  • உடலது பொறுத்து
    இந்த தேகத்தைத் தாங்கி
  • அறக் கடைபெறு பிறப்பினுக்கு
    மிகக் கீழானதாகப் பெறப்பட்ட இந்தப் பிறவியிலே
  • உணர்வுடைய சித்தமற்று
    ஞானம் கலந்த சிந்தை இல்லாமல்
  • அடிநாயேன் உழலும் அது கற்பு அல
    நாயினும் கீழான நான் அலைந்து திரியும் தன்மை நீதி ஆகாது.
  • கழலிணையெ னக்களித்து
    வீரக் கழல் அணிந்த உன் திருவடிகளை எனக்கு அளித்து,
  • உனது தமர் ஒக்க வைத்தருள்வாயே
    உன்னை அண்டியுள்ள பழைய அடியார் கூட்டத்தில் என்னையும் ஒருசேர வைத்து அருள் புரிய வேண்டுகிறேன்.
  • கொடியவொரு குக்குடக் கொடிய
    கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான சேவலைக் கொடியாக உடையவனே,
  • வடிவிற்புனக்கொடிபடர் புயக்கிரிக் கதிர்வேலா
    அழகான தினைப்புனத்து வள்ளிக் கொடி படரும் புயமலைகளை உடைய, ஒளி பொருந்திய வேலாயுதனே,
  • குமர சமரச்சினக்கும் அரவணி யத்தன்மெய்க்குமர
    குமரனே, போரில் சீறிப் பாயும் பாம்பை அணியும் தந்தை சிவபிரானின் மெய்ப் புதல்வனே,
  • மகிழ் முத்தமிழ்ப் புலவோனே
    மூன்று தமிழிலும் மகிழும் வித்தகனே,
  • தடவிகட மத்தகத் தடவரையர் அத்தர் அத்த
    விசேஷமான அழகிய மத்தகத்தோடு கூடிய பெரிய மலை போன்ற கணபதியின் தந்தை சிவபிரானுக்கு குருவே,
  • அடல் அனுச
    அதே கணபதியின் பராக்ரமம் மிகுந்த தம்பியே,
  • வித்தகத் துறையோனே
    ஞான நிலையில் விளங்குபவனே,
  • தருமருவும்
    விருக்ஷங்கள் பொருந்தி விளங்கும் தலமும்,
  • எத்தலத்தரும் மருவ முத்தியைத் தரு
    பூமியின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் தன்னிடம் வந்து வேண்டினால் அவர்களுக்கு முத்தியைத் தரும் தலமுமாகிய
  • திருவி டைக்கழிப் பெருமாளே.
    திருவிடைக்கழித் தலத்தில் அமர்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com