தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் ...... தனதான
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் ...... தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் ...... பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் ...... திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் ...... குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
- பகரு முத்தமிழ்ப் பொருளும்
புகழப்படுகின்ற முத்தமிழ் நூல்களின் பொருளையும், - மெய்த்தவப் பயனும்
உண்மைத் தவத்தால் பெறக்கூடிய பயனையும், - எப்படிப் பலவாழ்வும்
எத்தன்மைத்தான பலதரப்பட்ட வாழ்வையும், - பழைய முத்தியிற் பதமு(ம்)
தொன்று தொட்டு வரும் முக்திச் செல்வ நிலையையும், - நட்புறப் பரவு கற்பகத் தருவாழ்வும்
யாவரும் விரும்பிப் போற்றும் கற்பகத்தரு உள்ள தேவலோக வாழ்க்கையையும், - புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும்
குற்றமற்ற புத்தியுடன் ராஜயோகத்தைப் பெற்று விளங்கும் - அற்புதப் பெருவாழ்வும்
அற்புதமான சிறந்த வாழ்வையும், - புலன் அகற்றிடப் பலவிதத்தினைப் புகழ்
ஐம்புலச் சேஷ்டைகள் நீங்கப்பெற உன் பலவகைப் பெருமைகளைப் புகழும் - பலத்தினைத் தரவேணும்
அறிவுப் பலத்தையும் நாவன்மையையும் நீ தந்தருள வேண்டும். - தகரில் அற்றகைத் தலம்விட
(தக்ஷயாகத்தில் நடைபெற்ற) சண்டையின்போது தகர்க்கப்பட்டு அறுந்துபோன கைகளைக் கொண்ட அக்கினிதேவனது கைத்தலங்கள் (முருகனின் ஆறு பொறிகளின் சூடு தாங்காமல்) கங்கையில் விட்டுவிட - பிணைச் சரவ ணத்தினிற் பயில்வோனே
இணைந்திருக்கும் சரவணப் பொய்கையில் பொருந்தி வளர்ந்தவனே, - தனிவ னத்தினிற் புனமறத்தியை
தனியாக வள்ளிமலைக் காட்டில் தினைப்புனத்தைக் காத்த மறக்குலத்து வள்ளியை - தழுவு பொற்புயத் திருமார்பா
தழுவிய அழகு புயங்களையும் திருமார்பையும் உடையவனே, - சிகர வெற்பினைப் பகிரும்
சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலையைப் பிளந்து பகிர்ந்த - வித்தகத் திறல் அயிற்சுடர்க் குமரேசா
ஞானமும் வலிமையும் வடிவான சுடர்வேலை உடைய குமரேசனே, - செழுமலர்ப்பொழிற் குரவமுற்ற
செழிப்பான பூஞ்சோலைகளில் குராமரங்கள் உள்ள - பொற்றிருவி டைக்கழிப் பெருமாளே.
அழகிய திருவிடைக்கழியில்* மேவும் பெருமாளே.