திருப்புகழ் 768 கட்காமக்ரோத (சீகாழி)

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
கட்கா  மக்ரோ  தத்தே  கட்சீ 
மிழ்த்தோர்  கட்குக்  ......  கவிபாடிக் 
கச்சா  பிச்சா  கத்தா  வித்தா 
ரத்தே  யக்கொட்  ......  களைநீளக் 
கொட்கா  லக்கோ  லக்ஆகா  ணத்தே 
யிட்டா  சைப்பட்  ......  டிடவேவை 
கொட்டா  னக்கூ  னுக்கா  எய்த்தே 
னித்தீ  தத்தைக்  ......  களைவாயே 
வெட்கா  மற்பாய்  சுற்றூ  மர்ச்சேர் 
விக்கா  னத்தைத்  ......  தரிமாறன் 
வெப்பா  றப்பா  டிக்கா  ழிக்கே 
புக்காய்  வெற்பிற்  ......  குறமானை 
முட்கா  னிற்கால்  வைத்தோ  டிப்போய் 
முற்சார்  செச்சைப்  ......  புயவீரா 
முத்தா  முத்தீ  யத்தா  சுத்தா 
முத்தா  முத்திப்  ......  பெருமாளே. 
  • கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்குக் கவி பாடி
    கள் குடிப்பதிலும், காம வசப்படுதலிலும், கோபப்படுவதிலும், இவைகளின் கண் வசப்பட்டவர்கள் மீது பாடல்களைப் பாடி,
  • கச்சா பிச்சாகத் தாவித்து ஆரத்தே அக் கொட்களை நீளக் கொள்கால்
    தெளிவில்லாத முறையில் பாடப் பட்டோர் பெருமையை பாமாலையில் நிலை நிறுத்தி, அப்படிப் பாடியதால் கொண்ட பொருள்களை நெடுநாளாகச் சேகரிக்கும் போது,
  • அக்கோலக் கோணத்தே இட்டு ஆசைப் பட்டிடவே வை கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இத்தீது அத்தைக் களைவாயே
    அந்த அழகிய முக்கோணம் போன்ற பெண்குறிக்கே கொடுத்து ஆசைப்பட்டிடவே வைத்து (இங்ஙனம்) ஏற்கும் தானத்துக்காகவும், இந்த உடலுக்காகவும் தேடி இளைத்தேன். இந்தத் தீய குணத்தை நீக்கி அருள்வாயாக.
  • வெட்காமல் பாய் சுற்று ஊமர்ச் சேர் விக்கானத்தைத் தரி மாறன் வெப்பு ஆறப் பாடிக் காழிக்கே புக்காய்
    வெட்கப்படாமல் ஆடையாக அரையில் பாயைச் சுற்றிக் கொள்ளும் அறிவிலிகளாகிய சமணர்களைச் சேர்ந்த தீதைக் கொண்டிருந்த பாண்டியனின் சுரம் தணியும்படி ('மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் பதிகத்தைப்) பாடி, சீகாழி* என்னும் ஊரில் புகுந்து இருந்த திருஞான சம்பந்தனே,
  • வெற்பில் குறமானை முள் கானில் கால் வைத்து ஓடிப் போய் முற்சார் செச்சைப் புய வீரா
    வள்ளி மலையில் குறப் பெண் வள்ளியை, முள் தைக்கும் காட்டில் காலை வைத்து ஓடிப்போய் முன்பு தினைப்புனத்திலே சென்று தழுவிய, வெட்சி மாலை அணிந்த தோள்களை உடைய வீரனே,
  • முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.
    முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com