தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன ...... தனதான
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
மெய்யா ரப்பணி பூஷண மாலைக
ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி
ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
கையா ரக்கணை மோதிர மேய்பல
வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச்
செய்வா ரிப்படி யேபல வாணிப
மிய்யா ரிற்பண மேயொரு காசிடை
செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச்
செய்வா ரிற்படு நானொரு பாதகன்
மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே
மையா ரக்கிரி யேபொடி யாய்விட
பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா
வையா ளிப்பரி வாகன மாகொளு
துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத்
திய்யா ரக்கழு வேறிட நீறிடு
கையா அற்புத னேபிர மாபுர
செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
- ஒய்யாரச் சிலையாம் என வாசனை மெய் ஆரப் பணி பூஷண
மாலைகள் உய்யா நற் கலையே கொடு மா மத இதமாகி
அலங்காரமான சிலை உருவம் என்று சொல்லும்படி, நறுமணம் உடலில் நிரம்ப, அணி ஆபரண மாலைகளைச் சுமந்து, நல்ல ஆடையை அணிந்து, மிக்க காம இன்பம் கொடுப்பவர் ஆகி, - ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆரக் கணை
மோதிரம் ஏய் பல உள்ளார்
தமக்கு ஒப்பாகமாட்டார் இந்த பூமியில் உள்ளோர் என்று சொல்லும்படியாக இரு கைகளிலும் முத்திரை மோதிரம் பல அணிந்தவர்களாய், - செப்பிட ஏம் உற நாளிலும் உடல்பேணிச் செய்வார் இப்படியே
பல வாணிபம்
சொல்லப்போனால், கலக்கம் உறும் மாதவிடாய் நாட்களிலும் தம் உடலை விரும்பிப் பாதுகாத்து இப்படியே பல வியாபாரம் செய்வார்கள். - இய்யார் இல் பணமே ஒரு காசு இடை செய்யார் சற்பனைகாரர்
பிசாசர் உ(ன்)னடி பேணாச் செய்வாரில் படு நான் ஒரு
பாதகன்
பணத்தைத் தானமாகக் கொடாதவர்கள். ஒரு காசு அளவு கூட வெளிவிடார்கள். வஞ்சனை செய்பவர்கள். பிசாசு போன்றவர்கள். (தமது வேசைத்தொழிலைச்) செய்பவர்கள் கூட்டத்தில் உன் திருவடியைப் போற்றாது அகப்பட்ட நான் ஒரு பாவி. - மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது செய்யா அற்புதமே பெற ஓர்
பொருள் அருள்வாயே
உண்மையாக எப்படி ஒரு கரை நான் சேர்வது? செந்நிற வேளே, அற்புதம் ஆகும் வண்ணம் அந்த ஒப்பற்ற பொருளை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. - மை ஆர் அக் கிரியே பொடியாய் விட பொய் சூர் அப்பதியே
கெட வானவர் வையாய் பொன் சரணா எனவே தொழ விடும்
வேலா
இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை பொடிபட்டுக் கீழே விழவும், பொய் நிறைந்த அசுரர்களின் தலைவனான சூரனுடைய ஊர் அழியவும், தேவர்கள் எங்களை நல்ல நிலையில் வைத்தருள்வாய், அழகிய பாதங்களை உடையவனே என்று வேண்டி வணங்க வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, - வையாளிப் பரி வாகன மா கொளு துவ்வு ஆழிக் கடல் ஏழ்
மலை தூளி செய் மை போலக் கதிர் ஏய் நிறமாகிய மயில்
வாழ்வே
சவாரிக்கு உதவும் வாகனமாக குதிரை போன்ற மயிலைக் கொண்ட வாழ்வே, (அகத்தியரால்) உண்ணப்பட்ட ஆழமான ஏழு கடல்கள், ஏழு மலைகள் ஆகியவை கலக்கமுற, பசுமை நிறம் கொண்ட ஒளி பொருந்திய மயில் மேல் வரும் செல்வமே, - தெய்வ யானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ்
ஆகரனே புகழ் தெய்வீகப் பரமா குருவே என விருது ஊத
தேவயானைக்கு நாயகனே, குறப் பெண் வள்ளி மகிழ்கின்ற செந்நிறம் உடையவனே, முத்தமிழுக்கு இருப்பிடமானவனே, புகழ் நிரம்பிய தெய்வீகம் பொருந்திய பரம் பொருளே, சிறந்த குருவே என்று வெற்றிச் சின்னங்கள் ஊத, - திய்யார் அக் கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர
செய் காழிப் பதி வாழ் முருகா சுரர் பெருமாளே.
தீயராகிய சமணர்கள் அந்தக் கழுவில் ஏறும்படி திருநீற்றைப் பரப்பியிட்ட (திருஞானசம்பந்தராக வந்த) திருக்கரத்தனே, அற்புதமானவனே, பிரமாபுரம் என்னும் பெயர் பெற்றதும், வயல்கள் சூழ்ந்ததுமான சீகாழியில்* வீற்றிருக்கும் முருகனே, தேவர்கள் பெருமாளே.