தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
இரத மான தேனூற லதர மான மாமாத
ரெதிரி லாத பூணார ...... முலைமீதே
இனிது போடு மேகாச உடையி னாலு மாலால
விழியி னாலு மாலாகி ...... யநுராக
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய்
அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற
அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற்
புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
புரண பூர ணாகார ...... முருகோனே
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
- இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர்
சுவை நிரம்பிய தேன் போல ஊறும் வாய் இதழ் ஊறலை உடைய அழகிய விலைமாதர்களின் - எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே
நிகர் இல்லாத அணிகல மாலைகள் கொண்ட மார்பகங்களின் மேல் - இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால
விழியினாலும் மால் ஆகி
அழகாக அணிந்துள்ள மேலாடை உடையினாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும் காம மயக்கம் கொண்டு, - அநுராக விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாடோறும்
ம்ருகமத ஆதிசேர் ஓதி நிழல் மூழ்கி
காமப் பற்றினால் வேதனைப்பட்டு, படுக்கையில் எப்போதும் நாள் தோறும் கஸ்தூரி முதலிய நறு மணங்கள் சேர்ந்துள்ள கூந்தலின் நிழலிலே மூழ்கினவனாய், - விளையும் மோக மா மாயை கழலுமாறு
(அதனால்) ஏற்படும் காம மயக்கம் என்னும் பெரிய மாயை என்னை விட்டு அகலுமாறு, - நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள் தாராய்
நாயினும் அடியவனாகிய நானும் வீணன் ஆகாதவாறு உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. - அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள்
பூசியா மூடர்
அரகரா என்று கூறாத மூடர்கள், திருநீற்றைப் பூசாத மூடர்கள், அடியவர்களைப் பணியாத மூடர்கள், - கரை ஏற அறிவு நூல் க(ல்)லா மூடர் நெறியிலே நி(ல்)லா
மூடர்
கரை ஏறுவதற்கான நல்ல அறிவைத் தரும் ஞான நூல்களைக் கல்லாத மூடர்கள், நல்ல நெறியைக் கடைபிடிக்காத மூடர்கள், - அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் புரள வீழ்வர்
தருமம் இன்னதென்று கூட விசாரணை செய்யாத மூடர்கள் ஏழு* நரகங்களிலும் புரளும்படி விழுவார்கள். - ஈராறு கர விநோத சேய் சோதி
பன்னிரண்டு திருக் கரங்களை உடைய விநோதனே, செவ்வேளே, ஜோதி வடிவானவனே, - புரணம் பூரணாகார முருகோனே
நிறைந்த ஒளி பொருந்திய பூரண உருவத்தனே, முருகனே, - புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி
வாழ் தேவர் பெருமாளே.
மேகம் உலாவும் விண் நாட்டவர் போற்றிப் பரவி நாள்தோறும் ஈடேறுகின்ற புகலி என்னும் சீகாழியில்** வீற்றிருந்து வாழ்கின்ற, தேவர்களின் பெருமாளே.