திருப்புகழ் 764 அலைகடல் சிலை (சீகாழி)

தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
அலைகடல்  சிலைமதன்  அந்தி  யூதையும் 
அரிவையர்  வசையுட  னங்கி  போல்வர 
அசைவன  விடைமணி  யன்றில்  கோகிலம்  ......  அஞ்சிநானும் 
அழலிடு  மெழுகென  வெம்பி  வேர்வெழ 
அகிலொடு  ம்ருகமத  நஞ்சு  போலுற 
அணிபணி  மணிபல  வெந்து  நீறெழ  ......  அங்கம்வேறாய் 
முலைகனல்  சொரிவர  முன்பு  போல்நினை 
வழிவச  மறஅற  நின்று  சோர்வுற 
முழுதுகொள்  விரகனல்  மொண்டு  வீசிட  ......  மங்கிடாதே 
முருகவிழ்  திரள்புய  முந்து  வேலணி 
முளரியொ  டழகிய  தொங்கல்  தாரினை 
முனிவற  நினதருள்  தந்தென்  மாலைமு  ......  னிந்திடாதோ 
சிலைநுதல்  கயல்விழி  செஞ்சொல்  வானவி 
திரிபுரை  பயிரவி  திங்கள்  சூடிய 
திகழ்சடை  நெடியவள்  செம்பொன்  மேனியள்  ......  சிங்கமேறி 
திரள்படை  யலகைகள்  பொங்கு  கோடுகள் 
திமிலையொ  டறைபறை  நின்று  மோதிட 
சிவனுட  னடம்வரு  மங்கை  மாதுமை  ......  தந்தவேளே 
மலைதனி  லொருமுநி  தந்த  மாதுதன் 
மலரடி  வருடியெ  நின்று  நாடொறு 
மயில்பயில்  குயில்கிளி  வம்பி  லேகடி  ......  தொண்டினோனே 
மழைமுகில்  தவழ்தரு  மண்டு  கோபுர 
மதிள்வயல்  புடையுற  விஞ்சு  காழியில் 
வருமொரு  கவுணியர்  மைந்த  தேவர்கள்  ......  தம்பிரானே. 
  • அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும்
    அலை வீசும் கடல், வில் ஏந்திய மன்மதன், மழைக் காலத்துக் காற்று,
  • அரிவையர் வசையுடன் அங்கி போல் வர
    மாதர்களின் வசைப் பேச்சு இவை எல்லாம் நெருப்பு போல (என்னிடம்) வர,
  • அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும்
    அசைந்து வருகின்ற மாடுகளின் மணிகளின் ஒலி, அன்றில் பறவை, குயில் இவற்றின் ஓசைக்குப் பயந்து நானும்,
  • அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ
    நெருப்பிலிட்ட மெழுகு போல் உருகி, வியர்த்து விறுவிறுக்க,
  • அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற
    சாம்பிராணிப் புகையும், கஸ்தூரியும் விஷம் போலத் தாக்க,
  • அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய்
    அணிந்துள்ள ஆபரணங்கள் ரத்ன மாலைகள் பலவும் வெந்து சாம்பலாக, உடல் நிலை வேறுபட்டு,
  • முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அற அற நின்று சோர்வு உற
    மார்பகங்கள் நெருப்பைச் சொரிய, முன்பிருந்த நினைவானது அழிந்து, தன் வசம் மிகக் கெட நின்று, தளர்ச்சி உண்டாக,
  • முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே
    முழு நிலையில் வந்துள்ள விரக வேதனை நெருப்பை மொண்டு வீச, அதனால் நான் சோர்வு அடையாமல்,
  • முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை
    வாசனை வீசுகின்ற திரண்ட புயங்கள் வேகமாகச் செலுத்தும் வேலாயுதம், அற்புதப் பாதத் தாமரை இவையுடன் அழகிய தொங்கும் பூ மாலையை,
  • முனிவு அற நினது அருள் தந்து என் மாலை முனிந்திடாதோ
    வெறுப்பு, கோபம் இல்லாமல் உன்னுடைய திருவருளைத் தந்து, என்னுடைய காம மயக்கத்தைக் கடிந்து நீக்காதோ?
  • சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி
    வில் போன்ற நெற்றி, கயல் மீன் போன்ற கண்கள், செம்மை வாய்ந்த சொல்லை உடைய வானவி தேவி,
  • திரி புரை பயிரவி திங்கள் சூடிய திகழ் சடை நெடியவள்
    மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பைரவியாகிய சிவனது பத்தினி, சந்திரனைச் சூடிய விளக்கமுற்ற சடையை உடைய பெரியவள்,
  • செம்பொன் மேனியள் சிங்கம் ஏறி
    செம்பொன் மேனி நிறத்தவள், சிங்க வாகனம் கொண்டவள்,
  • திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள்
    கூட்டமான படையாகப் பேய்களை உடையவள், ஒலி பொங்கி மேலெழும் ஊது கொம்புகள்,
  • திமிலையொடு அறை பறை நின்று மோதிட
    திமிலைப் பறையுடன், முழங்கும் பறை இவையெல்லாம் இருந்து பேரொலி செய்ய,
  • சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே
    சிவபெருமானுடன் நடனம் செய்யும் மங்கை, மாது, உமை என்ற பார்வதி பெற்ற முருக வேளே,
  • மலை தனில் ஒரு முநி தந்த மாது தன் மலர் அடி வருடியெ நின்று நாள் தொறும்
    வள்ளி மலைச் சாரலில் தவம் செய்த ஒரு முனிவர் பெற்ற வள்ளியின் திருவடியை வருடி நின்று, நாள் தோறும்,
  • மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே
    மயில், நெருங்கி வரும் குயில், கிளி இவைகளை, புதியனவாய் (கவண் கல் கொண்டு) கடிந்து (வள்ளிக்கு ஆயல் ஓட்டும் தொழிலில்) தொண்டு செய்தவனே,
  • மழை முகில் தவழ் தரும் மண்டு கோபுர
    மழை கொண்ட மேகங்கள் தவழ்கின்ற நெருங்கிய கோபுரங்கள்
  • மதிள் வயல் புடை உற விஞ்சு காழியில்
    மதில், வயல் இவை சூழ மேம்பட்டு விளங்கும் சீகாழியில்*
  • வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே.
    அவதரித்தக் கவுணிய குலத்துப் பிள்ளையாகிய ஞானசம்பந்தனே, தேவர்களின் தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com