திருப்புகழ் 737 பரவுவரிக் கயல் (திருவதிகை)

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் ...... தனதான
பரவுவரிக்  கயல்குவியக்  குயில்கிளியொத்  துரைபதறப் 
பவளநிறத்  ததரம்விளைத்  ......  தமுதூறல் 
பருகிநிறத்  தரளமணிக்  களபமுலைக்  குவடசையப் 
படைமதனக்  கலையடவிப்  ......  பொதுமாதர் 
சொருகுமலர்க்  குழல்சரியத்  தளர்வுறுசிற்  றிடைதுவளத் 
துகிலகலக்  க்ருபைவிளைவித்  ......  துருகாமுன் 
சொரிமலர்மட்  டலரணைபுக்  கிதமதுரக்  கலவிதனிற் 
சுழலுமனக்  கவலையொழித்  ......  தருள்வாயே 
கருகுநிறத்  தசுரன்முடித்  தலையொருபத்  தறமுடுகிக் 
கணைதொடுமச்  சுதன்மருகக்  ......  குமரேசா 
கயிலைமலைக்  கிழவனிடக்  குமரிவிருப்  பொடுகருதக் 
கவிநிறையப்  பெறும்வரிசைப்  ......  புலவோனே 
திரள்கமுகிற்  றலையிடறிப்  பலகதலிக்  குலைசிதறிச் 
செறியும்வயற்  கதிரலையத்  ......  திரைமோதித் 
திமிதிமெனப்  பறையறையப்  பெருகுபுனற்  கெடிலநதித் 
திருவதிகைப்  பதிமுருகப்  ......  பெருமாளே. 
  • பரவு வரிக் கயல் குவியக் குயில் கிளி ஒத்து உரை பதற
    ரேகைகளோடு கூடிய, கயல் மீன் போன்ற கண்கள் குவியவும், குயிலையும் கிளியையும் ஒத்ததான பேசும் மொழி பதற்றத்துடன் வெளி வரவும்,
  • பவள நிறத்து அதரம் விளைத்த அமுது ஊறல் பருகி நிறத் தரளம் அணிக் களப முலைக் குவடு அசைய
    பவளத்தின் நிறம் கொண்ட வாயிதழ்கள் விளைவிக்கும் அமுது போன்ற ஊறலை உண்டும், ஒளி வீசும் முத்து மாலை அணிந்த, (சந்தனக்) கலவை பூண்ட, மார்பாகிய மலை அசைவு தரவும்,
  • படை மதனக் கலை அடவிப் பொதுமாதர் சொருகு மலர்க்குழல் சரியத் தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல
    ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனது காமசாஸ்திரக் குப்பையை உணர்ந்துள்ள பொது மாதர்களின் பூக்கள் சொருகியுள்ள கூந்தல் சரியவும், தளர்ந்துள்ள சிறிய இடை துவளவும், ஆடை விலகவும்,
  • க்ருபை விளைவித்து உருகா முன் சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இத மதுரக் கலவி தனில் சுழலும் மனக் கவலை ஒழித்து அருள்வாயே
    காம ஆசையை விளைவித்து உருகி எதிரே சொரியப்பட்ட பூக்களின் வாசனை பரந்துள்ள படுக்கையில் புகுந்து இன்பம் தரும் இனிமையான புணர்ச்சியிலே சுழலுகின்ற என் மனக் கவலையை நீக்கி அருள்வாயாக.
  • கருகு நிறத்து அசுரன் முடித் தலை ஒரு பத்து அற முடுகிக் கணை தொடும் அச்சுதன் மருகக் குமரேசா
    கரிய நிறம் கொண்ட அசுரனாகிய ராவணனது மகுடம் அணிந்த தலைகள் பத்தும் அற்று விழ, வேகமாகச் சென்று அம்பைச் செலுத்திய ராமனின் (திருமாலின்) மருகனே, குமரேசனே,
  • கயிலை மலைக் கிழவன் இடக் குமரி விருப்பொடு கருதக் கவி நிறையப் பெறும் வரிசைப் புலவோனே
    கயிலை மலைக்கு உரியவனாகிய சிவ பெருமானுடைய இடது பாகத்தில் உள்ள பார்வதி விருப்பத்துடன் (கொடுக்கக்) கருதிய (பால் அமுது ஊட்டவும்), பாடல்கள் நிறையப் பாடும் திறத்தைப் பெற்ற கீர்த்தியை உடைய திருஞான சம்பந்தப் புலவனே,
  • திரள் கமுகின் தலை இடறிப் பல கதலிக் குலை சிதறிச் செறியும் வயல் கதிர் அலையத்
    திரண்ட கமுகு மரத்தின் உச்சியில் இடறியும், பல வாழைகளின் குலைகள் சிதறிடவும், நிறைந்த வயல்களில் நெற்கதிர்கள் அலைபாயவும்,
  • திரை மோதி திமிதிமி எனப் பறை அறையப் பெருகு புனல் கெடில நதித் திருவதிகைப் பதி முருகப் பெருமாளே.
    அலைகள் வீசி, திமிதிமி எனப் பறைகள் முழங்கவும், பெருகி வரும் நீருடைய கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com