தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.
- பிறவியான சடமிறங்கி
இந்தப் பிறப்புக்கு என்று ஏற்பட்ட உடலிலே புகுந்து, - வழியிலாத துறைசெறிந்து
நல்வழி இல்லாத வேறு வழிகளிலே நெருங்கிப்போய், - பிணிகளான துயருழன்று தடுமாறி
நோய் முதலிய துக்கங்களின் வேதனையுடன் தடுமாறி, - பெருகு தீய வினையி னொந்து
பெருகும் கெட்ட வினைகளினால் கஷ்டப்பட்டு, - கதிகடோறும் அலைபொருந்தி
இவ்வாறு பிறப்புக்கள் தோறும் அலைச்சல் அடைந்து, - பிடிபடாத ஜனன நம்பி யழியாதே
பிறவியின் உண்மைத்தன்மை ஏதும் புலப்படாத இந்தப் பிறப்பையே நம்பி அழிந்து போகாமல், - நறைவிழாத மலர்முகந்த
தேன் நீங்காத மலர்கள் நிரம்பியதும், - அரிய மோன வழிதிறந்த
அருமையான மெளன வழியைத் திறந்து காட்டுவதுமான - நளின பாத மெனது சிந்தை யகலாதே
உனது தாமரைப் பாதங்கள் என் மனத்தை விட்டு நீங்காமல், - நரர் சுராதிபரும்வணங்கும்
மனிதர்களும், தேவர் தலைவர்களும் வணங்குகின்ற - இனிய சேவை தனைவி ரும்பி
இனிமையான உன் தரிசனத்தை விரும்பி - நலனதாக அடிய னென்று பெறுவேனோ
நன்மை அடையும் பாக்கியத்தை யான் என்று பெறுவேனோ? - பொறிவழாத முநிவர்
ஐம்பொறிகளும் தவறான வழியில் போகாமல் காத்திருந்த நக்கீர முனிவர் - தங்கள் நெறிவழாத பிலனு ழன்று
(குகையில் அடைபட்டாலும்) தமது நித்திய அநுஷ்டானங்களை தவறாமல் நின்று காத்த குகையிலே மன அலைச்சலுற்று, - பொருநிசாசரனைநினைந்து வினைநாடி
குகையில் அகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவிருந்த ராட்சசனை* வெல்ல நினைந்த நக்கீரர் உய்யும் வழியை நாடியபோது, - பொருவிலாமல் அருள்புரிந்து
ஒப்பில்லாத அன்பு வழியிலே கிருபை கூர்ந்து, - மயிலினேறி நொடியில் வந்து
உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து, - புளக மேவ தமிழ்புனைந்த முருகோனே
புளகாங்கிதம் கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு, (நக்கீரரை குகையினின்று மீட்டு) திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே, - சிறுவராகி யிருவர்
சிறுவரான லவ, குசர் என்னும் ஸ்ரீராமரின் புதல்வர்கள் இருவரும் - அந்த கரிபதாதி கொடுபொருஞ்சொல்
அந்த யானைப்படை, காலாட்படை இவற்றைக் கொண்டு, போரில் வீர வாசகங்களுடன் - சிலையிராமனுடனெதிர்ந்து சமராடி
வில் ஏந்திய ஸ்ரீராமருடன் எதிர்த்துப் போர் செய்து, - செயமதான நகர் அமர்ந்த
வெற்றி பெற்ற நகரமாகிய சிறுவையில்** அமர்ந்த, - அளகை போல வளமிகுந்த சிறுவை மேவி
குபேரப்பட்டினம் போல வளப்பம் மிக்கதான சிறுவையில் வீற்றிருந்த, - வரமி குந்த பெருமாளே.
வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே.