தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன ...... தனதான
சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
- சீதள வாரிஜ பாதா நமோநம
குளிர்ந்த தாமரை மலர்ப் பாதனே, போற்றி, போற்றி, - நாரத கீத விநோதா நமோநம
நாரதருடைய இசையில் மகிழ்பவனே, போற்றி, போற்றி, - சேவல மாமயில் ப்ரீதா நமோநம
சேவற்கொடியோனே, சிறந்த மயில்மீது பிரியமானவனே, போற்றி, போற்றி, - மறைதேடுஞ் சேகரமானப்ர தாபா நமோநம
வேதங்கள் தேடும் அழகான கீர்த்தியை உடையோனே, போற்றி, போற்றி, - ஆகம சார சொரூபா நமோநம
ஆகமங்களின் சார ஸ்வரூபமாக உள்ளவனே, போற்றி, போற்றி, - தேவர்கள் சேனை மகீபா நமோநம
தேவர்களின் சேனைக்குத் தலைவனே, போற்றி, போற்றி, - கதிதோயப் பாதக நீவு குடாரா நமோநம
நற்கதி அடைய, பாதகத்தைப் பிளக்கும் கோடாரியே, போற்றி, போற்றி, - மா அசுரேச கடோரா நமோநம
பெரிய அசுரர்கள் அஞ்சும்படியாக கொடுமை காட்டுபவனே, போற்றி, போற்றி, - பாரினிலே ஜய வீரா நமோநம
இவ்வுலகிலே ஜயவீரனாக விளங்குபவனே, போற்றி, போற்றி, - மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோநம
மலைமகள் பார்வதி பெற்றெடுத்த செல்வமே, போற்றி, போற்றி, - நாவல ஞான மனஉலா நமோநம
வாக்கிலே வித்தகனே, ஞான மனத்தில் உலவுகின்றவனே, போற்றி, போற்றி, - பாலகுமாரசுவாமீ நமோநம அருள்தாராய்
பாலகுமாரசுவாமீ, போற்றி, போற்றி, நினதருளைத் தருவாயாக. - போதக மாமுக நேரான சோதர
யானையின் சிறந்த முகத்தோனுக்கு நேர் இளைய சகோதரனே, - நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
திருநீறு அணிந்த சடைப் பெருமானுக்குப் பிரியமானவனே, ஞான சூரியனே, - பூமகளார் மருகேசா மகோததி யிகல்சூரா
லக்ஷ்மிதேவியின் மருமகனே, ஈசனே, பெருங் கடலைப் பகைத்து வேல் விட்ட சூரனே, - போதக மாமறை ஞானா தயாகர
சிறந்த வேதங்களை போதிக்க வல்லவனே, ஞானனே, கருணா மூர்த்தியே, - தேனவிழ் நீப நறாவாரு மார்பக
தேன் சொட்டும் கடப்பமலரின் மணம் வீசும் திருமார்பை உடையவனே, - பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா
பூரணச் சந்திரனைப் போல விளங்கும் ஆறு முகத்தானே, முருகேசா, - மாதவர் தேவர்களோடே முராரியும்
தவ முநிவர்கள், தேவர்கள், அவர்களுடன் திருமாலும், - மாமலர் மீதுறை வேதாவுமே புகழ்
தாமரை மலரின் மீதுள்ள பிரமனும், யாவரும் புகழும் நாயகனே, - மாநிலம் ஏழினு மேலான நாயக வடிவேலா
பெரிய உலகங்கள் ஏழிலும் மேலான தலைவனான வடிவேலனே, - வானவ ரூரினும் வீறாகி
தேவர்களது ஊரான அமராபுரியைக் காட்டிலும் மேம்பட்ட, - வீறளகாபுரி வாழ்வினு மேலாகவே
புகழ் பெற்ற குபேரன் ஊராகிய அளகாபுரியைக் காட்டிலும் மிகச் சிறந்த, - திருவாழ் சிறுவாபுரி வாழ்வே
லக்ஷ்மி வாசம் செய்யும் சிறுவாபுரித் தலத்தின் செல்வமே, - சுராதிபர் பெருமாளே.
தேவர் தலைவர்களுக்கெல்லாம் பெருமாளே.