தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று ...... தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த ...... குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
- குதிபாய்ந்தி ரத்தம் வடிதொளைத்தொக்கு
குதித்துப் பாய்ந்து ஓடும் ரத்தமானது வடிகின்ற தொளைகளை உடையதும், தோலை உடையதும் - இந்த்ரி யக் குரம்பை
ஐந்து பொறிகளை உடையதுமான இந்த உடம்பு, - வினைகூர்தூர் குணபாண்டமுற்று
வினை மிகுந்து நிரம்பியுள்ள குணங்களுக்குப் பாத்திரமான இந்த உடம்புதான் - அகிலமெனக் கைக் கொண்டிளைத்து அயர்ந்து சுழலாதே
சகல செல்வமுமாகும் என்று மேற்கொண்டு, அதனால் இளைத்துச் சோர்வுற்றுத் திரியாமல், - உதிதாம்ப ரத்தை யுயிர்கெட
மனத்திலே உதிக்கின்றதாகும் பரம்பொருளை, ஆத்ம தத்துவம் நீங்க, - பொற் கிண்கி ணிச்சதங்கை விதகீத
அழகிய கிண்கிணி, சதங்கை ஆகியவை விதவிதமான கீதங்களை இசைக்கும் - உபய அம்புயப் புணையையினி
இரண்டு தாமரையை ஒத்த உன் திருவடிகளாம் தெப்பத்தை இனியாவது - பற்றுங்க ருத்தை யென்று தருவாயே
பற்றிக் கொண்டு வாழும் கருத்தை எனக்கு நீ எப்போது தருவாய்? - கதைசார்ங்க கட்கம் வளை
கதை, சாரங்கம், வாள், பாஞ்சஜன்யம் என்ற சங்கு, - அடற்சக்ரந் தரித்த கொண்டல் மருகோனே
வலிமை வாய்ந்த சுதர் னம் என்ற சக்கரம் ஆகிய பஞ்ச ஆயுதங்களையும் தரித்த மேக நிறத்துத் திருமாலின் மருகனே, - கருணாஞ்சனக் கமலவிழி
கருணையும் அஞ்சன மையும் கொண்ட தாமரையைப் போன்ற கண்களை உடைய - பொற்பைம்பு னக் கரும்பின் மணவாளா
அழகிய பசுமையான தினைப்புனத்தில் இருந்த கரும்பு போல் இனிய வள்ளியின் மணவாளனே, - மதன அந்தகர்க்கு மகவெனப் பத்மந்தனிற்பி றந்த குமரேசா
மன்மதனுக்கு யமனாக இருந்த சிவபிரானுக்குக் குழந்தையாக தாமரையில் பிறந்த* குமரேசனே, - மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே.
மதுராந்தகத்தில் உள்ள வட திருச்சிற்றம்பலம்** என்ற தலத்தில் அமர்ந்து விளங்கும் பெருமாளே.