தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த ...... தனதான
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.
- வாசித்த நூல் மதங்கள் பேசிக் கொடாத விந்து வாய்மை
ப்ரகாசம் என்று நிலையாக
கற்றுள்ள நூல்களும் மதங்களும் விளக்கம் தர முடியாத சிவதத்துவமாகிய உண்மை ஒளியானது என்றும் நிலைத்திருக்கவேண்டி, - மாசிக் கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயுப் பிராணன்
ஒன்று மடைமாறி
மேகம்போல் படர்ந்த மண்டை ஓடாகிய வெளியிடத்தும், நாசிக்குள்ளும் ஓடுகின்ற பிராணவாயுவாகிய ஒன்றை, அது செல்லும் வழியை மாற்றி, - யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து
சுழுமுனையில் கூட்டி*, அதனால் தளர்கின்ற உடம்பின்மீது நேசம் வைத்து, சிவயோக நிலையில் நிற்காது அலைபாய்ந்து, - ரோமத் துவாரம் எங்கும் உயிர் போக
மயிர்த் தொளை எங்கும் உயிர் பாய்ந்து ஓடும்வண்ணம், - யோகச் சமாதி கொண்டு மோகப் பசாசு மண்டு லோகத்தில்
மாய்வது என்றும் ஒழியாதோ
கர்மயோகச் சமாதி நிலையைப் பூண்டு, மோகம் என்கின்ற பேய் நிரம்பியுள்ள இந்த உலகில் இறந்துபோதல் என்பது என்றைக்கும் நீங்காதோ? - வீசு அப் பயோதி துஞ்ச வேதக் குலாலன் அஞ்ச மேலிட்ட
சூர் தடிந்த கதிர்வேலா
அலை வீசும் கடல் வலிமை குன்ற, பிரமன் என்கின்ற குயவன் அஞ்சி நிற்க, மேலே எதிர்த்துவந்த சூரனை வதம் செய்த ஒளி வேலனே, - வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில்
அன்று விழுவோனே
வீரம் உள்ளன என்ற புகழைப் பெற்றுள்ள (மன்மதனது) ஐந்து மலர்க் கணைகளால் காம மயக்கம் கொண்டு வேடர்குல வள்ளியின் பாதங்களில் அன்று விழுந்தவனே, - கூசிப் புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளப் புராரி
தந்த சிறியோனே
அச்சம் அடைந்து போய் ஒதுங்கும்படி, மாமனாகிய தட்சனை தயங்காது தலையை அரிந்தவரும், பயனற்ற திரிபுரத்தைப் பகைத்து எரித்தவருமான சிவபெருமான் தந்த இளையோய், - கோழிப் பதாகை கொண்ட கோலக் குமார கண்ட
கோழிக்கொடியைக் கொண்ட அழகிய குமரனே, வீரனே, - கோடைக்குள் வாழ வந்த பெருமாளே.
கோடைநகரில்** வாழ்கின்ற பெருமாளே.