திருப்புகழ் 703 ஆதிமுதன் நாளில் (கோடைநகர்)

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமுத  னாளி  லென்றன்  தாயுடலி  லேயி  ருந்து 
ஆகமல  மாகி  நின்று  ......  புவிமீதில் 
ஆசையுட  னேபி  றந்து  நேசமுட  னேவ  ளர்ந்து 
ஆளழக  னாகி  நின்று  ......  விளையாடிப் 
பூதலமெ  லாம  லைந்து  மாதருட  னேக  லந்து 
பூமிதனில்  வேணு  மென்று  ......  பொருள்தேடிப் 
போகமதி  லேயு  ழன்று  பாழ்நரகெய்  தாம  லுன்றன் 
பூவடிகள்  சேர  அன்பு  ......  தருவாயே 
சீதைகொடு  போகு  மந்த  ராவணனை  மாள  வென்ற 
தீரனரி  நார  ணன்றன்  ......  மருகோனே. 
தேவர்முநி  வோர்கள்  கொண்டல்  மாலரிபிர்  மாவு  நின்று 
தேடஅரி  தான  வன்றன்  ......  முருகோனே 
கோதைமலை  வாழு  கின்ற  நாதரிட  பாக  நின்ற 
கோமளிய  நாதி  தந்த  ......  குமரேசா 
கூடிவரு  சூரர்  தங்கள்  மார்பையிரு  கூறு  கண்ட 
கோடைநகர்  வாழ  வந்த  ......  பெருமாளே. 
  • ஆதிமுதன் நாளில் என்றன் தாயுடலி லேயி ருந்து
    முதல் முதலாக எனது தாயின் உடலில் இருந்து
  • ஆகமல மாகி நின்று புவிமீதில்
    பல அழுக்குகள் நிறைந்த உருவுடன், இந்தப் பூமியிலே
  • ஆசையுடனே பிறந்து
    பிறக்கும்போதே ஆசையுடன் பிறந்து,
  • நேசமுடனே வளர்ந்து
    பெற்றோர் சுற்றத்தார் ஆகியோரின் அன்புடன் வளர்ந்து,
  • ஆள் அழகனாகி நின்று விளையாடி
    ஆள் அழகன் என்னும்படியாக விளங்கி, விளையாடி,
  • பூதலமெலாம் அலைந்து
    பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து
  • மாதருடனேகலந்து
    பெண்களுடன் மருவிக் கலந்து,
  • பூமிதனில் வேணுமென்று பொருள்தேடி
    பூமியில் அவசியத்தின் காரணமாகப் பொருள்களைத் தேடி
  • போகமதிலே உழன்று
    சுகபோகங்களில் ஈடுபட்டுத் திரிந்து
  • பாழ்நரகெய்தாமல்
    பாழான நரகத்தை நான் அடையாமல்,
  • உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே
    உனது மலர்ப்பாதங்களை அடைய அன்பைத் தந்தருள்வாயாக.
  • சீதைகொடு போகும் அந்த ராவணனை
    சீதையைக் கவர்ந்து சென்ற அந்த ராவணனை
  • மாள வென்ற தீரனரி நாரணன்றன் மருகோனே
    கொன்று வென்ற தீரனாம் ஹரி, நாராயணனின் மருகனே,
  • தேவர்முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவு நின்று தேட
    தேவர்கள், முநிவர்கள், மேகவண்ணன் திருமால், பிரம்மா இவர்களெல்லாம் நின்று தேடியும்
  • அரிதானவன்தன் முருகோனே
    காணுதற்கு அரிதாக விளங்கிய சிவனின் குழந்தையாம் முருகனே,
  • கோதை மலை வாழுகின்ற நாதரிட பாக நின்ற
    தேவியும், கயிலைநாதனாம் சிவபிரானின் இடப்பக்கம் மேவிய
  • கோமளி அநாதி தந்த குமரேசா
    அழகியும், தொடக்கமே இல்லாதவளுமான பார்வதி தந்த குமரேசனே,
  • கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
    ஒன்றுகூடி வந்த சூரரின் மார்பை இருகூறாகக் கண்டவனே,
  • கோடைநகர் வாழ வந்த பெருமாளே.
    கோடை நகரில்* வாழ்ந்திருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com