திருப்புகழ் 701 தோடு உறும் குழை (மாடம்பாக்கம்)

தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
தோடு  றுங்குழை  யாலே  கோல்வளை 
சூடு  செங்கைக  ளாலே  யாழ்தரு 
கீத  மென்குர  லாலே  தூமணி  ......  நகையாலே 
தூம  மென்குழ  லாலே  யூறிய 
தேனி  லங்கித  ழாலே  யாலவி 
லோச  னங்களி  னாலே  சோபித  ......  அழகாலே 
பாட  கம்புனை  தாளா  லேமிக 
வீசு  தண்பனி  நீரா  லேவளர் 
பார  கொங்கைக  ளாலே  கோலிய  ......  விலைமாதர் 
பாவ  கங்களி  னாலே  யான்மயல் 
மூழ்கி  நின்றய  ராதே  நூபுர 
பாத  பங்கய  மீதே  யாள்வது  ......  கருதாயோ 
நாட  ருஞ்சுடர்  தானா  வோதுசி 
வாக  மங்களி  னானா  பேதவ 
நாத  தந்த்ரக  லாமா  போதக  ......  வடிவாகி 
நால்வி  தந்தரு  வேதா  வேதமு 
நாடி  நின்றதொர்  மாயா  தீதம 
னோல  யந்தரு  நாதா  ஆறிரு  ......  புயவேளே 
வாட  யங்கியவேலா  லேபொரு 
சூர்த  டிந்தருள்  வீரா  மாமயி 
லேறு  கந்தவி  நோதா  கூறென  ......  அரனார்முன் 
வாச  கம்பிற  வாதோர்  ஞானசு 
கோத  யம்புகல்  வாசா  தேசிக 
மாடை  யம்பதி  வாழ்வே  தேவர்கள்  ......  பெருமாளே. 
  • தோடு உறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே
    தோடு என்னும் ஆபரணமும் குண்டலங்களும் தரித்த செவிகளினாலும், திரட்சியாக உள்ள வளையல்களைத் தரித்த சிவந்த கைகளாலும்,
  • யாழ் தரு கீத மென் குரலாலே தூ மணி நகையாலே
    யாழைப் போல இனிய இசை கொண்ட மென்மையான குரலாலும், பரிசுத்தமான ஒளி வீசும் பற்களாலும்,
  • தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே
    (அகில்) புகை ஊட்டிய மெல்லிய கூந்தலாலும், தேன் ஊறியது போல் விளங்கும் வாயிதழாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும், அவற்றின் ஒளி வீசும் அழகாலும்,
  • பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர்
    பாடகம் என்னும் கொலுசைப் புனைந்த கால்களாலும், மிகவும் மணக்கும் பன்னீர் பூசப்பட்டு வளர்ந்துள்ள பாரமான மார்பகங்களாலும் (ஆடவர்களை) வளைக்கும் வேசிகளுடைய
  • பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே
    வஞ்சக நடிப்பால் நான் காம மயக்கத்தில் முழுகி நின்று சோர்வு அடையாமல்,
  • நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ
    (உனது) சிலம்பு அணிந்த திருவடித் தாமரையின் மேல் என்னை ஏற்றுக்கொள்வதை நீ நினைக்க மாட்டாயோ?
  • நாட அரும் சுடர் தானா ஓது சிவ ஆகமங்களின் நானா பேத அநாத (னே)
    நாடிக் காண்பதற்கு அரிதான ஜோதிப் பொருளான சிவபெருமானாக ஓதுகின்ற சிவ ஆகமங்களில், பலவிதமான பேதங்களால் போற்றப்படும், தனக்கு மேல் தலைவன் இல்லாத பரம் பொருளே,
  • தந்த்ர கலா மா போதக வடிவாகி நால் விதம் தரு வேதா
    மந்திர தந்திர சாஸ்திரங்களில் கூறப்படும் சிறந்த ஞான வடிவினனாகி, ருக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நால் வகையான வேதங்களையும் ஓதித் தரும் பிரமனும்,
  • வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புயவேளே
    வேதங்களும் நாடி நின்றதான, ஒப்பற்ற மாயைகளைக் கடந்து நிற்கும் மன ஒடுக்கத்தை (சாந்தியைத்) தரும் நாதனே, பன்னிரு திருப்புயங்களை உடையவனே,
  • வாள் தயங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என
    ஒளி பொருந்திய வேலைக் கொண்டு சண்டை செய்த சூரனை அழித்தருளிய வீரனே, சிறந்த மயிலை வாகனமாகக் கொண்ட கந்தனே, விநோதனே, நீ சொல்லுக என்று கேட்க
  • அரனார் முன் வாசகம் பிறவாதோர் ஞான சுக உதயம் புகல் வாசா தேசிக
    சிவபெருமானது முன்னிலையில் வாக்கால் தோற்றுவிக்க முடியாததான ஒப்பற்ற ஞான சுகத்தைப் பிறப்பிக்கும் பிரணவப் பொருளை உபதேசம் செய்த குரு மூர்த்தியே,
  • மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே.
    மாடம்பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருஞ்செல்வமே, தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com