திருப்புகழ் 698 குசமாகி யாருமலை (திருவான்மியூர்)

தனதான தானதன தனதான தானதன
தனதான தானதன ...... தனதான
குசமாகி  யாருமலை  மரைமாநு  ணூலினிடை 
குடிலான  ஆல்வயிறு  ......  குழையூடே 
குறிபோகு  மீனவிழி  மதிமாமு  காருமலர் 
குழல்கார  தானகுண  ......  மிலிமாதர் 
புசவாசை  யால்மனது  உனைநாடி  டாதபடி 
புலையேனு  லாவிமிகு  ......  புணர்வாகிப் 
புகழான  பூமிமிசை  மடிவாயி  றாதவகை 
பொலிவான  பாதமல  ......  ரருள்வாயே 
நிசநார  ணாதிதிரு  மருகாவு  லாசமிகு 
நிகழ்போத  மானபர  ......  முருகோனே 
நிதிஞான  போதமர  னிருகாதி  லேயுதவு 
நிபுணாநி  சாசரர்கள்  ......  குலகாலா 
திசைமாமு  காழியரி  மகவான்மு  னோர்கள்பணி 
சிவநாத  ராலமயில்  ......  அமுதேசர் 
திகழ்பால  மாகமுற  மணிமாளி  மாடமுயர் 
திருவான்மி  யூர்மருவு  ......  பெருமாளே. 
  • குசமாகி யாருமலை
    மார்பு எனப்பட்ட நிறைந்துள்ள மலை,
  • மரைமாநு ணூலினிடை
    தாமரையின் அழகிய நுண்ணிய நூல் போன்ற இடை,
  • குடிலான ஆல்வயிறு
    கருவுக்கு இருப்பிடமான ஆலிலை போன்ற வயிறு,
  • குழையூடே குறிபோகு மீனவிழி
    காதின் குண்டலங்களுக்கு குறி போகின்ற மீன் போன்ற கண்கள்,
  • மதிமாமு காருமலர்
    சந்திரனைப் போன்ற அழகிய முகமாகிய நிறைந்த மலர்,
  • குழல்கார் அதானகுணமிலிமாதர்
    மேகத்தைப் போன்ற கூந்தல் என்ற நற்குணமில்லாத பொது மகளிரின்
  • புசவாசையால்மனது உனைநாடிடாதபடி
    தோள்களை அணைக்கும் ஆசையால் என் மனம் உன்னை நாடாதபடி,
  • புலையேன் உலாவிமிகு புணர்வாகி
    இழிந்தவனாகிய நான் இங்கும் அங்கும் உலவித் திரிந்து, தீய வழியிலே மிகுந்த சேர்க்கையாகி,
  • புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
    புகழ் பெற்ற இப்பூமியிலே அழிவுற்று முடிந்துபோகாதபடி
  • பொலிவான பாதமலரருள்வாயே
    உன் பிரகாசமான பாதத் தாமரையைத் தந்தருள்வாயாக.
  • நிசநாரணாதி திரு மருகா
    மெய்யான நாராயணமூர்த்தியின் அழகிய மருகனே,
  • உலாசமிகு நிகழ்போதமானபர முருகோனே
    உள்ளக் களிப்பை மிகுத்து உண்டாக்கும் ஞான சொரூபமான மேலான முருகனே,
  • நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு நிபுணா
    பொக்கிஷம் போன்ற சிறந்த ஞான மந்திரத்தை, சிவபிரானுடைய இரண்டு செவிகளிலும் உபதேசித்து அருளிய சாமர்த்தியசாலியே,
  • நிசாசரர்கள் குலகாலா
    அசுரர்களின் குலத்துக்கே யமனாக இருந்தவனே,
  • திசைமாமுக ஆழியரி மகவான் முனோர்கள் பணி
    நான்கு திசைகளிலும் முகத்தைக் காட்டும் பிரமன், சுதர் னம் என்ற சக்ரதாரியான திருமால், இந்திரன் முதலான தேவர்கள் பணிகின்ற
  • சிவநாதர் ஆலமயில் அமுதேசர் திகழ்பால
    சிவபெருமான், விஷத்தை உண்ட அமுதைப் போன்ற ஈசருடைய விளக்கம் வாய்ந்த குழந்தையே,
  • மாகமுற மணிமாளி மாடமுயர்
    ஆகாயத்தை அளாவும்படியான அழகிய மாளிகை மாடங்கள் உயர்ந்துள்ள
  • திருவான்மியூர்மருவு பெருமாளே.
    திருவான்மியூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com