தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன ...... தனதான
மின்னிடைக லாப தொங்கலொ
டன்னமயில் நாண விஞ்சிய
மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே
மெள்ளவுமு லாவி யிங்கித
சொல்குயில்கு லாவி நண்பொடு
வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக
கன்னியர்கள் போலி தம்பெறு
மின்னணிக லார கொங்கையர்
கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான
கண்ணியிலு ளாக சுந்தர
பொன்னியல்ப தார முங்கொடு
கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய்
சென்னியிலு டாடி ளம்பிறை
வன்னியும ராவு கொன்றையர்
செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா
செம்முகஇ ராவ ணன்தலை
விண்ணுறவில் வாளி யுந்தொடு
தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிட
சண்முகம தாகி வன்கிரி
துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே
சொல்லுமுனி வோர்த வம்புரி
முல்லைவட வாயில் வந்தருள்
துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.
- மின் இடை கலாப(ம்) தொங்கல் ஒடு
மின்னல் போன்ற இடையில் கலாபம் என்னும் இடை அணியும் ஆடையின் முந்தானையும் விளங்க, - அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு
தெரு மீதே மெள்ளவும் உலாவி
அன்னமும், மயிலும் வெட்கம் அடையும்படியான (சாயலும், நடை அழகும்) அவைகளின் மேம்பட்ட மாதர் கூட்டம் ஒருமித்து ஒரு தெருவிலே மெதுவாக உலாவி, - இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர
கண் கணை தொடு மோக கன்னியர்கள் போல்
இன்பகரமான சொற்களை குயில் போலக் கொஞ்சிப்பேசி விரைவில் நட்பு பாராட்டி, வில்லைப் போன்ற புருவமும், கண்கள் அம்பு போலவும் கொண்டு காமம் மிக்க பெண்கள் போல, - இதம் பெறு மின் அணி க(ல்)லார(ம்) கொங்கையர்
கண்ணியில் விழாமல்
மின்னல் போல் ஒளி வீசும் அணி கலன்களையும், செங்கழு நீர் மாலையையும் பூண்டுள்ள இன்ப நலம் பெறுகின்ற மார்பினை உடையவர்களாகிய விலைமாதர்களின் வலையில் நான் அகப்படாமல், - அன்பொடு பத ஞான கண்ணியில் உ(ள்)ளாக சுந்தர பொன்
இயல் பதாரமும் கொ(ண்)டு கண்ணுறு வராமல் இன்பமொடு
எனை ஆள்வாய்
அன்புடன் ஞான பதமான வலையினுள் அகப்படும்படி, அழகிய பொலிவு நிறைந்த தாமரைத் திருவடிகளையும் கொடுத்து, கண் திருஷ்டி வராதபடி இனிமையுடன் என்னை ஆண்டருளுக. - சென்னியில் உடாடு இளம் பிறை வன்னியும் அராவு(ம்)
கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குரு நாதா
தலையில் ஊடுருவும் இளம் பிறையையும், வன்னியையும், பாம்பையும், கொன்றை மலரையும் கொண்டவர், சிவந்த ரத்தினங்கள் விளங்கும் சடையர் எனது தந்தையாகிய சிவபெருமானின் குரு நாதனே, - செம் முக இராவணன் தலை விண்ணுறவில் வாளியும் தொடு
தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே
(ரத்தத்தால்) செந்நிறம் காட்டிய ராவணனின் தலை ஆகாயத்தில் தெறித்து விழும்படி வில்லினின்றும் அம்பைச் செலுத்தியவனும், தெய்விக பொன் மயமான (சுதர் ன) சக்கரத்தை ஏந்திய அழகிய கையனுமாகிய திருமாலின் மருகனே, - துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி
துள்ளிட வெலாயுதம் தனை விடுவோனே
நெருங்கி எதிர்த்து வந்த அசுரர்கள் அழிய, ஆறு திருமுகங்களுடன் விளங்கி, வலிய கிரெளஞ்ச மலை, ஏழு மலைகள் ஆகியவை பதை பதைத்து மாள, வேலாயுதத்தைச் செலுத்தியவனே, - சொல்லு(ம்) முனிவோர் தவம் புரி முல்லை வட வாயில் வந்து
அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே.
புகழ்பெற்ற (பிருகு, வசிஷ்டர் முதலிய) முனிவர்கள் தவம் செய்த வடதிருமுல்லை வாயிலில்* வந்தருள் பாலிக்கும், சுத்தமான மேலான ஞானமுள்ள தேவர்களின் பெருமாளே.