தனதன தய்ய தனதன தய்ய
தனதன தய்ய ...... தனதான
குவலய மல்கு தவலிகள் முல்லை
குளிர்நகை சொல்லு ...... முதுபாகு
குழையிள வள்ளை யிடைசிறு வல்லி
குயமுலை கொள்ளை ...... விழைமேவிக்
கவலைசெய் வல்ல தவலரு முள்ள
கலவியில் தெள்ளு ...... கவிமாலை
கடிமல ரைய அணிவன செய்ய
கழலிணை பைய ...... அருள்வாயே
தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு
தனியுழை புள்ளி ...... யுடனாடித்
தருபுன வள்ளி மலைமற வள்ளி
தருதினை மெள்ள ...... நுகர்வோனே
அவநெறி சொல்லு மவரவை கொல்லு
மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே
அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல ...... பெருமாளே.
- குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு(ம்)
முது பாகு
உலகில் நிறைந்துள்ள, ஒழுக்கக் குறைபாடுகள் உள்ள விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்றவை, பேச்சும் முதிர்ந்த வெல்லம் போன்றது, - குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை
கொள்ளை
காது இளமையான வள்ளிக் கொடி போன்றது, இடுப்பு சிறிய கொடி ஒத்தது, இளமை வாய்ந்த மார்பகங்கள் பூரித்து உள்ளன (என்று எல்லாம் கூறி) - விழை மேவிக் கவலை செய் வல்ல தவலரும் உள்ள
கலவியில்
விருப்பம் மிகவும் அடைந்து, மனக் கவலை தரத்தக்க குற்றம், குறை உள்ளவர்களுடன் நான் இணைந்திருந்த போதும், - தெள்ளு கவி மாலை கடி மலர் ஐய அணிவன செய்ய கழல்
இணை பைய அருள்வாயே
தெளிந்த கவி மாலைகளையும், நறு மணம் உள்ள மலர் மாலைகளையும் அழகுற அணிவிப்பதற்காக உனது திருவடி இணைகளை மெல்ல எனக்கு அருள் புரிவாயாக. - தவ நெறி உள்ளு(ம்) சிவ முனி துள்ளு(ம்) தனி உழை
புள்ளி உடன் ஆடித் தரு புன வள்ளி
முன்பு, தவ நெறியில் தியானித்து இருந்த சிவ முனிவரின் (தவத்தைக் கலைத்துத்) துள்ளிச் சென்ற, ஒப்பற்ற, புள்ளி மானுடன் கலந்து பெற்றெடுத்தவளும், தினைப்புனத்தில் இருந்தவளும், - மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே
அந்த வள்ளி மலையில் இருந்த வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவளுமான வள்ளி கொடுத்த தினை மாவை மெதுவாக உண்டவனே, - அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி
நகர் வாழ்வே
பயனற்ற மார்க்கத்தைச் சொல்லி வந்த சமணர்களின் கூட்டத்தை (கழுவில்) மாய்த்த (திருஞானசம்பந்தராக வந்து) அழகு வாய்ந்த வெள்ளிகரம்* என்னும் நகரில் வாழும் செல்வனே, - அடையலர் செல்வம் அளறு இடை செல்ல அமர் செய வல்ல
பெருமாளே.
பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் எல்லாம் கடல் நீரில் மூழ்கி அழியும்படி சண்டை செய்ய வல்ல பெருமாளே.