திருப்புகழ் 657 சிகரிகள் இடிய (வெள்ளிகரம்)

தனதன தனன தனதன தனன
தய்ய தனத்த தந்த ...... தனதான
சிகரிக  ளிடிய  நடநவில்  கலவி 
செவ்வி  மலர்க்க  டம்பு  ......  சிறுவாள்வேல் 
திருமுக  சமுக  சததள  முளரி 
திவ்ய  கரத்தி  ணங்கு  ......  பொருசேவல் 
அகிலடி  பறிய  எறிதிரை  யருவி 
ஐவன  வெற்பில்  வஞ்சி  ......  கணவாஎன் 
றகிலமு  முணர  மொழிதரு  மொழியி 
னல்லது  பொற்பதங்கள்  ......  பெறலாமோ 
நிகரிட  அரிய  சிவசுத  பரம 
நிர்வச  னப்ர  சங்க  ......  குருநாதா 
நிரைதிகழ்  பொதுவர்  நெறிபடு  பழைய 
நெல்லி  மரத்த  மர்ந்த  ......  அபிராம 
வெகுமுக  ககன  நதிமதி  யிதழி 
வில்வ  முடித்த  நம்பர்  ......  பெருவாழ்வே 
விகசித  கமல  பரிமள  கமல 
வெள்ளி  கரத்த  மர்ந்த  ......  பெருமாளே. 
  • சிகரிக ளிடிய நடநவில் கலவி
    அஷ்ட கிரிகளும் பொடிபடும்படியாக நடனமாடும் கலாப மயில்,
  • செவ்வி மலர்க்க டம்பு
    அன்றலர்ந்த புதிய கடப்பமலர்,
  • சிறுவாள்வேல்
    சிறிய வாள், வேல்,
  • திருமுக சமுக சததள முளரி
    ஆறு திருமுகங்களின் சேர்க்கையாம் நூறு இதழ்கள் உள்ள தாமரைகள்,
  • திவ்ய கரத்திணங்கு பொருசேவல்
    திவ்யமான கரத்திலே பொருந்திய போர் செய்யவல்ல சேவல், (இவையெல்லாம் விளங்க)
  • அகிலடி பறிய எறிதிரை யருவி
    அகில் மரத்தின் வேரைப் பறித்து எறியும் அலைவீசும் அருவிகள் உள்ள,
  • ஐவனவெற்பில் வஞ்சி கணவா
    நெல் விளையும் வள்ளிமலையின் வஞ்சிக்கொடியனன வள்ளியின் கணவா,
  • என்றகிலமு முணர மொழிதரு மொழியினல்லது
    என்று உலகெலாம் உணரக் கூறும் சொற்களால் அல்லது
  • பொற்பதங்கள் பெறலாமோ
    உனது அழகிய திருவடிகளைப் பெற முடியுமோ?
  • நிகரிட அரிய சிவசுத பரம
    ஒப்பிடற்கு அரியரான சிவபிரானின் சேயே, பரமனே,
  • நிர்வசனப்ர சங்க குருநாதா
    வாக்குக்கு எட்டாததான பிரணவ உபதேசத்தைச் செய்த குருநாதனே,
  • நிரைதிகழ் பொதுவர் நெறிபடு
    பசுக்கூட்டங்களைக் கொண்ட இடையர்கள் செல்லும் வழியில் உள்ள
  • பழைய நெல்லி மரத்தமர்ந்த அபிராம
    பழைய நெல்லி மரத்தின்* கீழே வீற்றிருந்த அழகனே,
  • வெகுமுக ககன நதிமதி
    ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய கங்கை நதியையும், பிறையையும்,
  • இதழி வில்வ முடித்த நம்பர் பெருவாழ்வே
    கொன்றையையும், வில்வத்தையும் சடையில் முடித்த நம் சிவபெருமானின் பெருஞ் செல்வமே,
  • விகசித கமல பரிமள கமல
    மலர்ந்த தாமரைகளும், நறுமணம் மிகுந்த தாமரைகளும் நிறைந்த
  • வெள்ளி கரத்த மர்ந்த பெருமாளே.
    வெள்ளிகரத்தில்** வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com