தனதன தனத்த தான தனதன தனத்த தான
தனதன தனத்த தான ...... தனதான
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே
அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
னிருகர மிகுத்த பார ...... முருகாநின்
பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே
சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.
- அருவரை யெடுத்த வீரன்
அரியதான கயிலை மலையை அசைத்து எடுக்க முயன்ற வீரனான ராவணன் - நெரிபட விரற்கள் ஊணும்
நெரிபடும்படி தமது விரல்களை ஊன்றிய - அரனிட மிருக்கு மாயி யருள்வோனே
சிவபிரானின் இடது பாகத்தில் உள்ள அன்னை பார்வதி பெற்றருளிய குழந்தையே, - அலைகட லடைத்த ராமன்
அலை வீசும் கடலை அணையிட்டு அடைத்த ஸ்ரீராமன் - மிகமன மகிழ்ச்சி கூரும்
மிக்க மனமகிழ்ச்சி கொள்ளும், - அணிமயில் நடத்தும் ஆசை மருகோனே
அழகிய மயிலை வாகனமாகக் கொண்டு எட்டுத் திக்கிலும் நடத்திச் செல்லும், மருமகனே, - பருதியி னொளிக்கண் வீறும்
சூரியனது ஒளி தம்மிடத்தே விளங்கும் - அறுமுக நிரைத்த தோள்பனிருகர
முகங்கள் ஆறும், வரிசையான தோள்களும், பன்னிரண்டு கரங்களும் உடையவனே, - மிகுத்த பார முருகா
மிகுந்த பெருமை வாய்ந்த முருகனே, - நின்பதமல ருளத்தி னாளு நினைவுறு
உன் திருவடி மலரை உள்ளத்தில் தினமும் நினைத்துத் தொழுதிருக்கும் - கருத்தர் தாள்கள் பணியவும்
கருத்தை உடைய அடியார்களின் தாள்களைப் பணிந்திடவும் - எனக்கு ஞானம் அருள்வாயே
எனக்கு ஞானத்தைத் தந்தருள்வாயாக. - சுருதிகளுரைத்த வேதன் உரைமொழி தனக்குள் ஆதி
வேதங்களை ஓதும் பிரமன் சொன்ன மொழிகளுள் முதலாவதான ஓம் என்ற பிரணவத்தின் பொருளை - சொலுவென வுரைத்த ஞானகுருநாதா
எனக்கு நீ சொல்லுக என தந்தை சிவனார் கேட்க அவ்வாறே பொருள் உரைத்த ஞான குரு நாதனே, - சுரர்பதி தழைத்து வாழ
தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செழிப்புடன் வாழவும், - அமர்சிறை யனைத்து மீள
இருந்த சிறையினின்றும் தேவர்கள் யாவரும் மீளவும், - துணிபட அரக்கர் மாள விடும்வேலா
வெட்டுண்டு அசுரர்கள் இறந்தொழியவும், வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, - மருமலர் மணக்கும் வாச நிறைதரு
வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்துள்ள - தருக்கள் சூழும் வயல்புடை கிடக்கு
மரங்கள் சூழ்ந்த வயல்கள் பக்கத்தில் உள்ள - நீல மலர்வாவி வளமுறு தடத்தினோடு
நீலோத்பல மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு - சரஸ்வதி நதிக்கண் வீறு
சரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற - வயிரவி வனத்தில் மேவு பெருமாளே.
வயிரவிவனம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.