திருப்புகழ் 653 வேழம் உண்ட (காசி)

தான தந்தன தானன ...... தனதான
தான தந்தன தானன ...... தனதான
வேழ  முண்ட  விளாகனி  ......  யதுபோல 
மேனி  கொண்டு  வியாபக  ......  மயலூறி 
நாளு  மிண்டர்கள்  போல்மிக  ......  அயர்வாகி 
நானு  நைந்து  விடாதருள்  ......  புரிவாயே 
மாள  அன்றம  ணீசர்கள்  ......  கழுவேற 
வாதில்  வென்ற  சிகாமணி  ......  மயில்வீரா 
காள  கண்ட  னுமாபதி  ......  தருபாலா 
காசி  கங்கையில்  மேவிய  ......  பெருமாளே. 
  • வேழ முண்ட விளாகனி யதுபோல
    வேழம்* என்ற பழங்களுக்கு ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல
  • மேனி கொண்டு வியாபக மயலூறி
    உள்ளிருக்கும் சத்து நீங்கிய உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி,
  • நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி
    தினமும் அறிவின்மை மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து,
  • நானு நைந்து விடாதருள் புரிவாயே
    நானும் மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக.
  • மாள அன்று அமணீசர்கள் கழுவேற
    முன்பு சமணக் குருக்கள் கழுவில் ஏறி இறக்கும்படியாக
  • வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா
    வாது செய்து வென்ற (சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில் வீரனே,
  • காள கண்ட னுமாபதி தருபாலா
    விஷமுண்ட கண்டனாகிய உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே,
  • காசி கங்கையில் மேவிய பெருமாளே.
    கங்கைநதிக் கரையிலுள்ள காசி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com