திருப்புகழ் 619 மருவுமலர் வாசம் (புகழிமலை)

தனனதன தான தனனதன தான
தனனதன தான ...... தனதான
மருவுமலர்  வாச  முறுகுழலி  னாலும் 
வரிவிழியி  னாலு  ......  மதியாலும் 
மலையினிக  ரான  இளமுலைக  ளாலு 
மயல்கள்தரு  மாதர்  ......  வகையாலும் 
கருதுபொரு  ளாலு  மனைவிமக  வான 
கடலலையில்  மூழ்கி  ......  அலைவேனோ 
கமலபத  வாழ்வு  தரமயிலின்  மீது 
கருணையுட  னேமுன்  ......  வரவேணும் 
அருமறைக  ளோது  பிரமன்முதல்  மாலும் 
அமரர்முநி  ராசர்  ......  தொழுவோனே 
அகிலதல  மோது  நதிமருவு  சோலை 
அழகுபெறு  போக  ......  வளநாடா 
பொருதவரு  சூரர்  கிரியுருவ  வாரி 
புனல்சுவற  வேலை  ......  யெறிவோனே 
புகலரிய  தான  தமிழ்முநிவ  ரோது 
புகழிமலை  மேவு  ......  பெருமாளே. 
  • மருவுமலர் வாச முறுகுழலினாலும்
    தலையில் வைத்துள்ள பூங்கொத்துக்களின் நறுமணம் வீசும் கூந்தலினாலும்,
  • வரிவிழியினாலு மதியாலும்
    செவ்வரி ஓடிய விழிகளாலும், சந்திரன் போன்ற முகத்தாலும்,
  • மலையினிகரான இளமுலைகளாலு
    மலையை ஒத்த இளம் மார்பகங்களாலும்,
  • மயல்கள்தரு மாதர் வகையாலும்
    வகைவகையான விதங்களில் மோகத்தைத் தருகின்ற பெண்களாலும்,
  • கருதுபொருளாலு
    பேராசையுடன் விரும்பிச் சேர்க்கிற செல்வத்தாலும்,
  • மனைவிமகவான கடலலையில் மூழ்கி அலைவேனோ
    மனைவி, மக்கள் என்ற சம்சார சாகர அலைகளில் மூழ்கி அல்லல் அடைவேனோ?
  • கமலபத வாழ்வு தர
    உன் தாமரையைப் போன்ற திருவடிகளில் படியும் வாழ்வைத் தர,
  • மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும்
    மயில் மீது ஏறி கருணையுடன் என்முன்பு நீ வர வேண்டும்.
  • அருமறைகளோது பிரமன்முதல் மாலும்
    அரிய வேதங்களை ஓதும் பிரமன் முதலாக, திருமாலும்
  • அமரர்முநி ராசர் தொழுவோனே
    மற்ற தேவர்களும், முநிவர்களும், அரசர்களும் தொழப்பெற்றோனே,
  • அகிலதலம் ஓது நதிமருவு சோலை
    உலகத்துத் தலங்களில் உள்ள யாவரும் புகழும் நதியின் அருகிலுள்ள சோலைகளால்
  • அழகுபெறு போக வளநாடா
    அழகு பெறும் செல்வ வளங்கள் கூடிய நாடனே,
  • பொருதவரு சூரர் கிரியுருவ வாரி புனல்சுவற
    போர் செய்ய வந்த சூரர்களையும், கிரெளஞ்ச மலையையும் ஊடுருவும்படியும், கடலில் நீர் வற்றவும்
  • வேலை யெறிவோனே
    வேலைச் செலுத்தியவனே,
  • புகலரியதான தமிழ்முநிவர் ஓது
    சொல்லுதற் அரிதான தமிழ் முநிவராகிய அகஸ்தியர் புகழ்கின்ற
  • புகழிமலை மேவு பெருமாளே.
    புகழிமலையில்* வீற்றிருக்கின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com