திருப்புகழ் 618 அரிவையர்கள் (கநகமலை)

தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத்
தனதனன தனன தந்தத் ...... தனதான
அரிவையர்கள்  தொடரு  மின்பத் 
துலகுநெறி  மிகம  ருண்டிட் 
டசடனென  மனது  நொந்திட்  ......  டயராமல் 
அநுதினமு  முவகை  மிஞ்சிச் 
சுகநெறியை  விழைவு  கொண்டிட் 
டவநெறியின்  விழையு  மொன்றைத்  ......  தவிர்வேனோ 
பரிதிமதி  நிறைய  நின்றஃ 
தெனவொளிரு  முனது  துங்கப் 
படிவமுக  மவைகள்  கண்டுற்  ......  றகமேவும் 
படர்கள்முழு  வதும  கன்றுட் 
பரிவினொடு  துதிபு  கன்றெற் 
பதயுகள  மிசைவ  ணங்கற்  ......  கருள்வாயே 
செருவிலகு  மசுரர்  மங்கக் 
குலகிரிகள்  நடுந  டுங்கச் 
சிலுசிலென  வலைகு  லுங்கத்  ......  திடமான 
செயமுதவு  மலர்பொ  ருங்கைத் 
தலமிலகு  மயில்கொ  ளுஞ்சத் 
தியைவிடுதல்  புரியு  முன்பிற்  ......  குழகோனே 
கருணைபொழி  கிருபை  முந்தப் 
பரிவினொடு  கவுரி  கொஞ்சக் 
கலகலென  வருக  டம்பத்  ......  திருமார்பா 
கரிமுகவர்  தமைய  னென்றுற் 
றிடுமிளைய  குமர  பண்பிற் 
கநககிரி  யிலகு  கந்தப்  ......  பெருமாளே. 
  • அரிவையர்கள் தொடரு மின்பத்து
    மாதர்களைப் பின் தொடர்ந்து செல்லும் சிற்றின்பம் சார்ந்த
  • உலகுநெறி மிக மருண்டிட்டு
    உலகநெறியில் மிகுந்த மோகம் கொண்டு,
  • அசடனென மனது நொந்திட்டு அயராமல்
    அசடன் எனக் கருதப்பட்டு, மனம் வேதனைப்பட்டுச் சோர்வுறாமல்,
  • அநுதினமும் உவகை மிஞ்சி
    நாள் தோறும் களிப்பு மிகுந்து,
  • சுகநெறியை விழைவு கொண்டிட்டு
    அற்ப சுகவழியிலேயே விருப்பம் கொண்டு நடந்து,
  • அவநெறியின் விழையும் ஒன்றைத் தவிர்வேனோ
    பாவ வழியிலே செல்ல விரும்பும் புத்தியை நான் நீக்க மாட்டேனோ?
  • பரிதிமதி நிறைய நின்ற அஃதெனவொளிரும்
    சூரியனும் சந்திரனும் சேர்ந்து நிற்கும் தன்மையை ஒத்து ஒளிருகின்ற
  • உனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற்று
    உன் பரிசுத்தமான வடிவுள்ள திருமுகங்களைக் கண்டு,
  • அகமேவும் படர்கள் முழுவதும் அகன்று
    என் மனத்திலுள்ள துயரம் யாவும் நீங்கப் பெற்று,
  • பரிவினொடு துதிபுகன்று
    உள்ளத்தில் அன்போடு உன்னைத் துதித்து,
  • பதயுகள மிசை வணங்கற்கு அருள்வாயே
    ஒளி பொருந்திய உன் திருவடிகள் மீது வணங்குதற்கு அருள் புரிவாயாக.
  • செருவிலகு மசுரர் மங்க
    போர்க்களத்தில் பின்னடையும் அசுரர்களின் பெருமை மங்க,
  • குலகிரிகள் நடுநடுங்க
    பெருமை தங்கிய (கிரெளஞ்சம் முதலிய) மலைகளெல்லாம் நடுநடுங்க,
  • சிலுசிலென வலைகுலுங்க
    சிலுசிலுவென்று கடல் அலைகள் கலங்க,
  • திடமான செயமுதவு மலர்பொருங்கை
    உறுதி வாய்ந்ததும், வெற்றி தருவதும், மலர் போன்றதுமான திருக்கரத்தில்
  • தலமிலகும் அயில்கொளுஞ் சத்தியை
    விளங்கும் கூர்மையான சக்திவேலாயுதத்தை
  • விடுதல் புரியு முன்பிற் குழகோனே
    செலுத்தும் பெருமை வாய்ந்த இளையோனே,
  • கருணைபொழி கிருபை முந்த
    கருணை பொழியும் அருளே முந்துவதால்
  • பரிவினொடு கவுரி கொஞ்ச
    அன்போடு கெளரி (பார்வதி) கொஞ்சி நிற்க,
  • கலகலென வரு கடம்பத் திருமார்பா
    கலகல என்று தண்டை ஒலிக்க வரும் கடப்ப மாலை அணி மார்பனே,
  • கரிமுகவர் தமையனென்று உற்றிடும்
    யானைமுகக் கணபதியைத் தமையனாகப் பெற்று விளங்கும்
  • இளைய குமர
    இளைய சகோதரக் குமரனே,
  • பண்பிற் கநககிரி யிலகு கந்தப் பெருமாளே.
    அழகோடு கனககிரி* (பொன்மலை) யில் வாழும் கந்தப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com