தனத்தந் தானன தனத்தந் தானன
தனத்தந் தானன ...... தனதான
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி ...... லழியாதே
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு ...... முடையேனான்
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென ...... அருள்வாயே
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய ...... வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக ...... முடையோராம்
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர ...... வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை ...... பெருமாளே.
- கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு
மொழியாலே
கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க வடிகட்டி எடுக்கபட்ட சிறப்பான கரும்பின் சாறு என்று சொல்லும்படி (இனிக்கும்) பேச்சினால் - கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக் கண்
பார்வையில் அழியாதே
கருத்தையும், நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளாகிய விலைமாதர்களுடைய கடைக்கண் பார்வையில் அழிந்து விடாமல், - விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும்
உடையேன்
(அத்தகைய மயக்கத்தை) நீக்கவல்ல ஞான உபதேசத்தை, பிறருக்குக் கிட்டாத வகையில் நான் ஒருவனே சிறப்பாகப் பெற்று விளங்க விருப்பம் மிகவும் கொண்டுள்ள - நான் வினைக் கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை
விடற்கு அஞ்சேல் என அருள்வாயே
நான் ஊழ் வினையின் பயனாக மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும் பொருட்டு அபயம் என்று நீஅருள்வாயாக. - அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய
வடி வேலா
(தேவர் முதலியோரை) வருத்தி வந்த அசுரர்கள் குலத்துப் படைகளை அறுத்த கூர்மையான அழகிய வேலை ஏந்தியவனே, - அழைத்து உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும் போதகம்
உடையோராம்
உன்னை அழைத்து உனது சிறப்பான திருவடிச் செந்தாமரைகளைப் பற்றியுள்ள ஞானத்தை உடையவர்களாகிய - சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக
சிலருக்கு தாமதம் இன்றி அப்பொழுதே வீடு பேறு அளிக்கும் குரு மூர்த்தியே, - திருச் செம் கோபுர வயலூரா
அழகிய செவ்விய கோபுரங்களை உடைய வயலூரானே, - திதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய திருச் செங்கோடு
உறை பெருமாளே.
நீ காத்து அளிக்கும் இப் பூமியிடத்தே சிறப்பு மிகுந்து விளங்கும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே.