திருப்புகழ் · 59சேமக் கோமள (திருச்செந்தூர்)

தானத் தானன தானத் தானன
தானத் தானன ...... தந்ததான

Thiruppugazh Anbargal

சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும ...... நந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிக ...... அன்புறாதே
காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி ...... கின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும ...... தென்கொலோதான்
நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காளபு ...... யங்ககால
நீலக் ரீபக லாபத் தேர்விடு
நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே
ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
லோகத் தேதரு ...... மங்கைபாலா
யோகத் தாறுப தேசத் தேசிக
வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.

பத உரை

  • சேமக் கோமள பாதத் தாமரை
    காவலாய் இருப்பவையும் அழகானவையுமான உன் தாமரை போன்ற திருவடிகளை
  • சேர்தற் கோதும் அநந்தவேத அதீதத்தே
    அடைவதற்கு வழிகளைச் சொல்லும் கணக்கற்ற வேதங்களைக் கடந்த நிலையின் மீதும்,
  • அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்புறாதே
    பகையற்ற சாந்த நிலைமீதும், நற்குண நன்னெறியின் மீதும் அன்பை வைக்காமல்,
  • காம க்ரோத உலோபப் பூதவிகாரத்தே
    காமத்தாலும், கோபத்தாலும், ஈதற் குணமே இல்லாததாலும், ஐம்பூதங்களின் சேஷ்டைகளாலும்
  • அழிகின்ற மாயா காயத்தே
    அழிகின்ற மாயையான இந்த உடல் மீதும்,
  • பசு பாசத்தே
    இந்த ஜீவாத்மா இச்சைப் படுகின்ற உலகப் பற்றுக்களின் மீதும்
  • சிலர் காமுற்றேயும் அதென்கொலோதான்
    சிலர் ஆசைகொண்டு இருக்கின்ற அந்த நிலை ஏன்தானோ? தெரியவில்லை.
  • நேமிச் சூரொடு மேருத் தூளெழ
    கடலும், சூரனும், மேரு மலையும் தூளாகும்படி
  • நீளக் காள புயங்க கால
    நெடிய விஷமுடைய பாம்பைக் காலிலே கொண்டு
  • நீலக்ரீப கலாபத் தேர்விடு
    நீலக் கழுத்தையும் தோகையையும் கொண்ட தேர் போன்ற மயிலைச் செலுத்தும்
  • நீபச் சேவக செந்தில்வாழ்வே
    கடப்ப மாலை அணிந்த வீரனே, திருச்செந்தூரில் வாழ்பவனே,
  • ஓமத்தீ வழுவார்கட்கு ஊர்சிவ லோகத்தே
    வேள்வித்தீயை தவறாமல் வளர்ப்பவர்களுக்கு இருப்பிடத்தை சிவலோகத்திலே
  • தரு மங்கைபாலா
    தருகின்ற உமாதேவியின் குமாரனே,
  • யோகத்து ஆறு உபதேசத் தேசிக
    யோகவழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே,
  • ஊமைத் தேவர்கள் தம்பிரானே.
    உன் முன்னே வாயில்லா ஊமைகளாகிவிடும் தேவர்களின் தனிப் பெரும் தலைவனே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout