திருப்புகழ் · 58சந்தன சவ்வாது (திருச்செந்தூர்)

தந்ததன தானதன தத்தான
தந்ததன தானதன தத்தான
தந்ததன தானதன தத்தான ...... தனதான

Thinam Thinam Thirupugazh

சந்தனச வாதுநிறை கற்பூர
குங்குமப டீரவிரை கத்தூரி
தண்புழுக ளாவுகள பச்சீத ...... வெகுவாச
சண்பகக லாரவகு ளத்தாம
வம்புதுகி லாரவயி ரக்கோவை
தங்கியக டோரதர வித்தார ...... பரிதான
மந்தரம தானதன மிக்காசை
கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
வஞ்சகவி சாரஇத யப்பூவை ...... யனையார்கள்
வந்தியிடு மாயவிர கப்பார்வை
அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே
இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
சம்ப்ரமம யூரதுர கக்கார
என்றுமக லாதஇள மைக்கார ...... குறமாதின்
இன்பஅநு போகசர சக்கார
வந்தஅசு ரேசர்கல கக்கார
எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின்
செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
குன்றெறியும் வேலின்வலி மைக்கார
செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும்
திங்கள்முடி நாதர்சம யக்கார
மந்த்ரவுப தேசமகி மைக்கார
செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.

பத உரை

  • சந்தன ச(வ்)வாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி
    சந்தனம், சவ்வாது, நிறைந்த பச்சைக் கற்பூரம், செஞ்சாந்து, மணமுள்ள கஸ்தூரி,
  • தண் புழுகு அளாவு களபச் சீத வெகு வாச சண்பக க(ல்)லார வகுளத் தாம
    குளிர்ந்த புனுகுச் சட்டம் இவை சேர்ந்துள்ள கலவை பூசப்பட்டதாய், தண்ணிய மிக்க மணமுள்ள சண்பகப்பூ, செங்கழுநீர்ப்பூ, மகிழம்பூ இவற்றின் மாலைகள் பூண்டதாய்,
  • வம்பு துகில் ஆர வயிரக் கோவை தங்கிய கடோர தர வித்தார பரிதானமந்தரம் அது ஆன தன
    கச்சு, ஆடை (இவைகளின் மேற்கொண்ட) முத்து மாலை வைர மாலையை உடையதாய், கடினமும், விரிவும், பருமையும் உடையதாய், மந்தர மலை போன்றதாய் உள்ள மார்பகங்களை உடையவர்களாய்,
  • மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர வஞ்சக விசார இதயப் பூவை அனையார்கள்
    பேராசை கொண்டு பொருளைத் தேடும் மிகக் கொடியவர்களாய், வஞ்சக எண்ணம் கொண்ட மனம் உள்ளவர்களாய், அழகிய நாகணவாய்ப் புள்ளைப் போன்றவர்களாயுள்ள விலைமாதருடைய
  • வந்தியிடும் மாய விரகப் பார்வை அம்பில் உ(ள்)ளம் வாடும் அறிவற்றேனை
    வருத்தத்தை உண்டு பண்ணும் மாயக் காமப் பார்வையாகிய அம்பினால் மனம் வாடுகின்ற அறிவிலியாகிய என்னிடம்
  • வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே
    வந்து என்னை அடிமை கொண்டு ஆள்வதற்கு இனி எப்போது நினைப்பாய்?
  • இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார
    இந்திரனுடைய பொன்னுலகைக் காத்த முதன்மையாளனே, மிகச் சிறந்த மயிலாகிய குதிரையை வாகனமாகக் கொண்டவனே,
  • என்றும் அகலாத இளமைக்கார குற மாதின் இன்ப அநுபோக சரசக்கார
    என்றும் நீங்காத இளமையாக இருப்பவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் இன்ப அனுபோக காம லீலைகளை உடையவனே,
  • வந்த அசுரேசர் கலகக்கார எங்கள் உமை சேய் என அருமைக்கார
    வந்த அசுரர் தலைவர்களோடு போர் புரிந்தவனே, எங்களுடைய உமா தேவியின் குழந்தை என்ற அருமை வாய்ந்தவனே,
  • மிகு பாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார
    மிகுந்த பாடல் வகைகளில் செந்தமிழைக் கொண்டு (சம்பந்தராக வந்து தேவாரமாகப் புனைந்த) நாற்* கவியாளனே,
  • குன்று எறியும் வேலின் வலிமைக்கார செம் சொல் அடியார்கள் எளிமைக்கார
    கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த வேல் வலிமை கொண்டவனே, சத்தியச் சொல்லைக் கொண்ட அடியார்களுக்கு எளிமையாய் இருப்பவனே,
  • எழில் மேவும் திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார
    அழகு வாய்ந்த சந்திரனைத் தரித்த நாதருடைய சைவ சமயத்தனே, (அந்தச் சிவபெருமானுக்கு) மந்திர உபதேசம் செய்த பெருமை வாய்ந்தவனே,
  • செந்தில் நகர் வாழும் அருமைத் தேவர் பெருமாளே.
    திருச்செந்தூரில் வீற்றிருக்கும், அருமைத் தேவர்களின் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்: ஆசு - எதுகை மோனையுடன் கூடியது, மதுரம் - இனிமை வாய்ந்தது, சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது, வித்தாரம் - வர்ணனை மிக்கது.
  • * The four varieties of Tamil poetry are: Asu (alliteration) Mathuram (sweetness) Chiththiram (artful presentation) and ViththAram (description).

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout