திருப்புகழ் 548 அந்தோ மனமே (திருசிராப்பள்ளி)

தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன ...... தனதான
அந்தோமன  மேநம  தாக்கையை 
நம்பாதெயி  தாகித  சூத்திர 
மம்போருக  னாடிய  பூட்டிது  ......  இனிமேல்நாம் 
அஞ்சாதமை  யாகிரி  யாக்கையை 
பஞ்சாடிய  வேலவ  னார்க்கிய 
லங்காகுவம்  வாஇனி  தாக்கையை  ......  ஒழியாமல் 
வந்தோமிது  வேகதி  யாட்சியு 
மிந்தாமயில்  வாகனர்  சீட்டிது 
வந்தாளுவம்  நாமென  வீக்கிய  ......  சிவநீறும் 
வந்தேவெகு  வாநமை  யாட்கொளு 
வந்தார்மத  மேதினி  மேற்கொள 
மைந்தாகும  ராவெனு  மார்ப்புய  ......  மறவாதே 
திந்தோதிமி  தீதத  மாத்துடி 
தந்தாதன  னாதன  தாத்தன 
செம்பூரிகை  பேரிகை  யார்த்தெழ  ......  மறையோதச் 
செங்காடென  வேவரு  மூர்க்கரை 
சங்காரசி  காமணி  வேற்கொடு 
செண்டாடிம  காமயில்  மேற்கொளு  ......  முருகோனே 
இந்தோடிதழ்  நாகம  காக்கடல் 
கங்காளமி  னார்சடை  சூட்டிய 
என்தாதைச  தாசிவ  கோத்திர  ......  னருள்பாலா 
எண்கூடரு  ளால்நெளவி  நோக்கியை 
நன்பூமண  மேவிசி  ராப்பளி 
யென்பார்மன  மேதினி  நோக்கிய  ......  பெருமாளே. 
  • அந்தோ மனமே நம தாக்கையை நம்பாதெ
    ஐயோ மனமே, நிலையா நம் உடலை நிலைத்திருக்குமென நம்பி மோசம் போகாதே.
  • இதாகித சூத்திரம்
    இன்பமும் (இத) துன்பமும் (அகித) நிறைந்த இயந்திரம் இந்த உடம்பு.
  • அம்போருகன் ஆடிய பூட்டிது
    இது தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்ட பூட்டு.
  • இனிமேல்நாம் அஞ்சாதமையா
    சென்றது போக, இனிமேல் நாம் இந்த உடல் விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது.
  • கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு
    கிரெளஞ்ச மலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு
  • இயல் அங்காகுவம் வா
    நீங்காத அன்புடையவராக ஆகுவோம், நீ அங்கு வா.
  • இனிது ஆக்கையை ஒழியாமல் வந்தோம்
    இதுதான் இன்ப நெறியாகும். இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம்.
  • இதுவேகதி
    இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம்.
  • ஆட்சியும் இந்தா
    ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான். ஆகவே இதனைப் பெற்றுக்கொள்.
  • மயில் வாகனர் சீட்டிது
    இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு.
  • வந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும்
    நாம் வந்து உன்னை விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் நமக்கு அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள்.
  • வந்தேவெகுவாநமை யாட்கொள் உவந்தார்
    முருகப்பிரான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார்.
  • மதமேது இனி மேற்கொள
    இதைத்தவிர வேறு எந்த மதம் உள்ளது நாம் மேற்கொள்ள?
  • மைந்தாகுமராவெனும் ஆர்ப்பு உய மறவாதே
    சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலியோடு, நீ உய்வதற்கு, துதிப்பதை மறவாதே.
  • திந்தோதிமி தீதத மாத்துடி
    திந்தோதிமி தீதத என்று பெரிய உடுக்கையும்,
  • தந்தாதன னாதன தாத்தன
    தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன்
  • செம்பூரிகை பேரிகை யார்த்தெழ
    செம்மை பொருந்திய பூரிகை என்ற வாத்தியமும், பேரிகையும் ஆரவாரித்து ஒலி எழுப்பவும்,
  • மறையோத
    வேதங்கள் கோஷமிடவும்,
  • செங்காடென வேவரு மூர்க்கரை
    எதிர்த்து வந்த அசுரர்களை (ரத்தக் களரியில்) சிவந்த காட்டைப் போலக் கொன்று தள்ளி
  • சங்கார சிகாமணி வேற்கொடு
    சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு
  • செண்டாடி மகாமயில் மேற்கொளு முருகோனே
    அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே,
  • இந்தோடிதழ் நாக மகாக்கடல்
    சந்திரனையும், ஆமை ஓட்டினையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும்,
  • கங்காள மினார்சடை சூட்டிய
    எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள
  • என்தாதை சதாசிவ கோத்திரன் அருள்பாலா
    என் தந்தையும் சதாசிவ கோத்திரத்திற்குத் தலைவருமாகிய சிவபெருமான் பெற்றருளிய புதல்வனே.
  • எண்கூடருளால் நெளவி நோக்கியை
    அளவிடற்கரிய திருவருளால் மான் போன்ற நோக்குடைய வள்ளியை,
  • நன்பூமண மேவி
    நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு,
  • சிராப்பளி யென்பார்
    திருசிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை மாத்திரம் கூறும் பேறு பெற்றவர்களின்
  • மனமேதினி நோக்கிய பெருமாளே.
    மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com