திருப்புகழ் 547 அங்கை நீட்டி (திருசிராப்பள்ளி)

தந்த தாத்தன தத்தத் தானன
தந்த தாத்தன தத்தத் தானன
தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான
அங்கை  நீட்டிய  ழைத்துப்  பாரிய 
கொங்கை  காட்டிம  றைத்துச்  சீரிய 
அன்பு  போற்பொய்ந  டித்துக்  காசள  ......  வுறவாடி 
அம்பு  தோற்றக  ணிட்டுத்  தோதக 
இன்ப  சாஸ்த்ரமு  ரைத்துக்  கோகிலம் 
அன்றில்  போற்குர  லிட்டுக்  கூரிய  ......  நகரேகை 
பங்க  மாக்கிய  லைத்துத்  தாடனை 
கொண்டு  வேட்கையெ  ழுப்பிக்  காமுகர் 
பண்பில்  வாய்க்கம  யக்கிக்  கூடுத  ......  லியல்பாகப் 
பண்டி  ராப்பகல்  சுற்றுச்  சூளைகள் 
தங்கள்  மேற்ப்ரமை  விட்டுப்  பார்வதி 
பங்கர்  போற்றிய  பத்மத்  தாள்தொழ  ......  அருள்வாயே 
எங்கு  மாய்க்குறை  வற்றுச்  சேதன 
அங்க  மாய்ப்பரி  சுத்தத்  தோர்பெறும் 
இன்ப  மாய்ப்புகழ்  முப்பத்  தாறினின்  ......  முடிவேறாய் 
இந்த்ர  கோட்டிம  யக்கத்  தான்மிக 
மந்த்ர  மூர்த்தமெ  டுத்துத்  தாமத 
மின்றி  வாழ்த்திய  சொர்க்கக்  காவல  ......  வயலூரா 
செங்கை  வேற்கொடு  துட்டச்  சூரனை 
வென்று  தோற்பறை  கொட்டக்  கூளிகள் 
தின்று  கூத்துந  டிக்கத்  தோகையில்  ......  வரும்வீரா 
செம்பொ  னாற்றிகழ்  சித்ரக்  கோபுர 
மஞ்சி  ராப்பகல்  மெத்தச்  சூழ்தரு 
தென்சி  ராப்பள்ளி  வெற்பிற்  றேவர்கள்  ......  பெருமாளே. 
  • அம் கை நீட்டி அழைத்துப் பாரிய கொங்கை காட்டி மறைத்துச் சீரிய அன்பு போல் பொய் நடித்துக் காசு அளவு உறவாடி
    அழகிய கையை நீட்டி அழைத்தும், பருத்த மார்பகத்தைக் காட்டியும் மறைத்தும், சிறந்த அன்புள்ளவர்கள் போல் பொய் வேடத்துடன் நடித்தும், கொடுத்த பொருளுக்குத் தக்கவாறு உறவு காட்டியும்,
  • அம்பு தோற்ற கண் இட்டுத் தோதக இன்ப சாஸ்த்ரம் உரைத்துக் கோகிலம் அன்றில் போல் குரலிட்டுக் கூரிய நகரேகை பங்கம் ஆக்கி அலைத்துத் தாடனை கொண்டு வேட்கை எழுப்பி
    அம்பும் தோற்கும்படியான (கூர்மையான) கண்களால் மயக்கியும், வஞ்சகம் நிறைந்த காம இன்ப சாத்திரங்களை எடுத்துப் பேசியும், குயில் அன்றில் பறவை இவைகளைப் போல புட்குரலைக் காட்டியும், கூர்மையான நகம் கொண்டு காயப்படுத்தி அலைத்தும், காம சாத்திர முறையில் தட்டுதல் செய்தும் காம ஆசையை எழுப்பி,
  • காமுகர் பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் இயல்பாகப் பண்டு இராப்பகல் சுற்றுச் சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டுப் பார்வதி பங்கர் போற்றிய பத்மத் தாள் தொழ அருள்வாயே
    நாடி வருகின்ற காமுகரைத் தமது வசப்படும்படி செய்து, தம்முடன் கூடுதலையே ஒழுக்கமாகும்படிச் செய்து, முதலிலிருந்தே இரவும் பகலும் சுற்றி அலைக்கும் சூதுக்கார வேசிகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்து, பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக.
  • எங்குமாய்க் குறைவு அற்றுச் சேதன அங்கமாய்ப் பரிசுத்தத்தோர் பெறும் இன்பமாய்ப் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய்
    எங்கும் நிறைந்தவனாய், குறை இல்லாதவனாய், அறிவே வடிவு உடையவனாய், பரிசுத்த அன்பர்கள் அடையும் இன்பப் பொருளாய், புகழ் கொண்டவனாய், முப்பத்தாறு தத்துவங்களின் * முடிவுக்கும் வேறானவனாய்,
  • இந்த்ர கோட்டி மயக்கத்தான் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்துத் தாமதம் இன்றி வாழ்த்திய சொர்க்கக் காவல வயலூரா
    இந்திரன் முதலிய கூட்டத்துத் தலைவர்கள் கலந்து ஒன்று கூடி சிறந்த (சரவணபவ) மந்திர ரூப பூஜை செய்து தாமதம் இல்லாமல் வாழ்த்திய தேவ லோகக் காவலனே, வயலூர்த் தெய்வமே,
  • செங்கை வேல் கொ(ண்)டு துட்டச் சூரனை வென்று தோல் பறை கொட்டக் கூளிகள் தின்று கூத்து நடிக்கத் தோகையில் வரும் வீரா
    திருக்கையில் உள்ள வேலைக் கொண்டு துஷ்டனாகிய சூரனை வெற்றி கொண்டு, தோலாலாகிய பறைகள் கொட்ட, பேய்கள் அசுரப் பிணங்களை உண்டு கூத்தாடி நடிக்க, மயிலின் மேல் வரும் வீரனே,
  • செம்பொன் ஆர்த் திகழ் சித்ரக் கோபுரம் மஞ்சு இராப்பகல் மெத்தச் சூழ் தரு தென் சிராப் ப(ள்)ளி வெற்பின் தேவர்கள் பெருமாளே.
    செம் பொன்னால் விளங்கும் அழகிய கோபுரத்தின் மீது மேகங்கள் இரவும் பகலும் நிரம்பச் சூழ்ந்துள்ள அழகிய திரிசிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com