திருப்புகழ் 539 சிரம் அங்கம் அம் கை (வள்ளிமலை)

தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
தனதந்த தந்தனம் ...... தனதான
சிரமங்க  மங்கைகண்  செவிவஞ்ச  நெஞ்சுசெஞ் 
சலமென்பு  திண்பொருந்  ......  திடுமாயம் 
சிலதுன்ப  மின்பமொன்  றிறவந்து  பின்புசெந் 
தழலிண்கண்  வெந்துசிந்  ......  திடஆவி 
விரைவின்க  ணந்தகன்  பொரவந்த  தென்றுவெந் 
துயர்கொண்ட  லைந்துலைந்  ......  தழியாமுன் 
வினையொன்று  மின்றிநன்  றியலொன்றி  நின்பதம் 
வினவென்று  அன்புதந்  ......  தருள்வாயே 
அரவின்கண்  முன்துயின்  றருள்கொண்ட  லண்டர்கண் 
டமரஞ்ச  மண்டிவந்  ......  திடுசூரன் 
அகலம்பி  ளந்தணைந்  தகிலம்ப  ரந்திரங் 
கிடஅன்று  டன்றுகொன்  ......  றிடும்வேலா 
மரைவெங்க  யம்பொருந்  திடவண்டி  னங்குவிந் 
திசையொன்ற  மந்திசந்  ......  துடனாடும் 
வரையின்கண்  வந்துவண்  குறமங்கை  பங்கயம் 
வரநின்று  கும்பிடும்  ......  பெருமாளே. 
  • சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்சலம் என்பு திண் பொருந்திடு மாயம்
    தலை என்னும் உறுப்பு, அழகிய கை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவை நன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல்
  • சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு
    சில துயரங்களும் இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர்,
  • செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி
    சிவந்த நெருப்பில் வெந்து உயிர் பிரிதல் உறும்படி,
  • விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன்
    சீக்கிரத்தில் நமன் போரிட வந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்கு முன்பு
  • வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி
    தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர,
  • நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே
    உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக.
  • அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர்கண்டு அமர் அஞ்ச
    (ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேக நிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி,
  • மண்டி வந்திடு சூரன் அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட
    நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப் பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி) பரந்து ஒலிக்க,
  • அன்று உடன்று கொன்றிடும் வேலா
    அன்று கோபித்து (அவனைக்) கொன்ற வேலனே,
  • மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற
    தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட, வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க,
  • மந்தி சந்துடன் ஆடும் வரையின் கண் வந்து வண் குற மங்கை
    குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி) மலைக்கு* வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின்
  • பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே.
    பாதத் தாமரை வரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com