தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
தனதாத்த தய்ய ...... தனதான
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னை ...... யுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல ...... மணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
- குடிவாழ்க்கை
இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட - அன்னை மனையாட்டி பிள்ளை
தாயார், மனைவி, பிள்ளைகள், - குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்
குயில் போலப் பேசி எதிர்ப்படும் பெண்கள், - குலம் வாய்த்த நல்ல தனம்
பிறந்த குலம், கிடைத்த நல்ல செல்வம், - வாய்த்த தென்ன
எனக்குத் தான் கிடைத்தது என்று ஆணவம் கொண்டு, - குருவார்த்தை தன்னை உணராதே
குருவின் உபதேச மொழிகளை அறியாமல், - இட நாட்கள்
நாட்கள் வீணாகக் கழிந்திட, - வெய்ய நமனீட்டி
கொடிய யமன் இறுதியில் நெருங்கி வந்து - தொய்ய இடர்கூட்ட
சோர்வுறச்செய்யும் துன்பங்களைத் தர, - இன்னல் கொடுபோகி
துயரத்துடன் கொண்டுபோய் - இடுகாட்டில்
சுடுகாட்டில் (மயானத்தில்) - என்னை எரியூட்டு முன்
அடியேனைச் சுட்டெரிப்பதற்கு முன்பாக, - உன் இருதாட்கள் தம்மை
உனது இரு திருவடிகளை - உணர்வேனோ
உணர்ந்து அறிவேனோ? - வடநாட்டில் வெள்ளி மலை
வடநாட்டில் உள்ள வெள்ளியங்கிரியை (கயிலாயத்தை) - காத்து
(கோபுர வாசலில் அமர்ந்து) காவல் செய்து - புள்ளி மயில்மேல்
புள்ளியை உடைய மயிலின் மீது - திகழ்ந்த குமரேசா
விளங்குகின்ற குமரக் கடவுளே - வடிவாட்டி வள்ளி
வடிவழகியான வள்ளியின் - அடிபோற்றி
திருவடியைப் புகழ்ந்து, - வள்ளிமலை காத்த
வள்ளிமலையில்* அப்பிராட்டியின் சமயம் பார்த்துக் காத்திருந்த - நல்ல மணவாளா
நல்ல (வேளைக்கார) மணவாளனே - அடி நாட்கள் செய்த பிழை நீக்கி
யான் முன்னாட்களில் செய்த குற்றங்களைப் பொறுத்து, - என்னை அருள்போற்றும்
எனக்கு நின் திருவருளைப் போற்றும் - வண்மை தரும்வாழ்வே
வளப்பமான குணத்தைத் தந்தருளிய என் செல்வமே - அடிபோற்றி
நின் திருவடிகளைத் தொழுது, - அல்லி முடிசூட்ட வல்ல
தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல - அடியார்க்கு நல்ல பெருமாளே.
அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும் பெருமாளே.



