திருப்புகழ் 502 சுடரனைய திருமேனி (சிதம்பரம்)

தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான ...... தனதான
சுடரனைய  திருமேனி  யுடையழகு  முதுஞான 
சொருபகிரி  யிடமேவு  ......  முகமாறும் 
சுரர்தெரிய  லளிபாட  மழலைகதி  நறைபாய 
துகிரிதழின்  மொழிவேத  ......  மணம்வீச 
அடர்பவள  வொளிபாய  அரியபரி  புரமாட 
அயில்கரமொ  டெழில்தோகை  ......  மயிலேறி 
அடியனிரு  வினைநீறு  படஅமர  ரிதுபூரை 
அதிசயமெ  னருள்பாட  ......  வரவேணும் 
விடைபரவி  அயன்மாலொ  டமரர்முநி  கணமோட 
மிடறடைய  விடம்வாரி  ......  யருள்நாதன் 
மினலனைய  இடைமாது  இடமருவு  குருநாதன் 
மிகமகிழ  அநுபூதி  ......  யருள்வோனே 
இடர்கலிகள்  பிணியோட  எனையுமருள்  குறமாதி 
னிணையிளநிர்  முலைமார்பி  ......  னணைமார்பா 
இனியமுது  புலிபாத  னுடனரவு  சதகோடி 
யிருடியர்கள்  புகழ்ஞான  ......  பெருமாளே. 
  • சுடரனைய திருமேனி யுடையழகு
    கதிர் போன்ற திருமேனியின் வடிவழகும்,
  • முதுஞான சொருபகிரி யிடமேவு முகமாறும்
    முற்றின ஞான ஸ்வரூபமும், கிரீடம் சூடிய முகங்கள் ஆறும்,
  • சுரர் தெரியல் அளிபாட
    தேவர்கள் சூட்டிய மாலைகளில் இருக்கும் வண்டுகள் முரல,
  • மழலைகதி நறைபாய
    அம்மாலைகளிலிருந்து மெதுவான வேகத்தில் துளித்துளியாக தேன் சொட்ட,
  • துகிர் இதழின் மொழிவேத மணம்வீச
    பவள வாய் இதழிலிருந்து சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச,
  • அடர்பவள வொளிபாய அரிய பரிபுரம் ஆட
    அடர்ந்த பவளம் போன்ற ஒளி பாய, அருமையான சிலம்பு ஒலிக்க,
  • அயில்கரமொடு எழில் தோகை மயிலேறி
    வேல் ஏந்திய திருக்கரத்துடன் அழகிய கலாப மயில்மீது ஏறி,
  • அடியனிரு வினைநீறு பட
    அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு அழிய,
  • அமரர் இது பூரை அதிசயமென
    தேவர்கள் யாவரும் ஒன்றுக்கும் உதவாத எனக்கு நீஅருள் செய்வது எவ்வளவு ஆச்சரியம் என்று
  • அருள்பாட வரவேணும்
    உன்னருளைப் போற்றிப் பாடும்படியாக, நீ எழுந்தருளி வரவேண்டும்.
  • விடைபரவி அயன்மாலொடு அமரர் முநி கணமோட
    நந்தி தேவனைப் போற்றி வணங்கி, (அவர் அனுமதியுடன்) பிரமன், திருமால், மற்ற தேவர்கள், முநிவர் கூட்டங்களுடன் ஓடிவந்து சரணடைய,
  • மிடறடைய விடம்வாரி யருள்நாதன்
    தமது கண்டத்திலேயே தங்கி நிற்கும்படியாக விஷத்தை வாரி உண்டு சரணடைந்தவர்களுக்கு அருள் செய்த தலைவனும்,
  • மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
    மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதி தேவியை தமது இடப்பாகத்தில் பொருந்தி வைத்துள்ள தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபிரான்
  • மிகமகிழ அநுபூதி யருள்வோனே
    மிகவும் மகிழ்ச்சி அடைய அவருக்கு ஞானோபதேசப் பிரசாதம் தந்தவனே,
  • இடர்கலிகள் பிணியோட எனையுமருள்
    துன்பங்களும், கிரகக் கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக.
  • குறமாதின் இணையிளநிர் முலைமார்பின் அணைமார்பா
    குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே,
  • இனிய முது புலிபாதனுடன்
    இன்ப நிலையில் உள்ள முதிய முநி* வியாக்ரபாதருடன்,
  • அரவு சதகோடி யிருடியர்கள்
    பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும்
  • புகழ்ஞான பெருமாளே.
    புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com