தாந்தன தானதன தாந்தன தானதன
தாந்தன தானதன ...... தனதான
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
மோந்துப யோதரம ...... தணையாகச்
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக
காந்தமொ டூசியென ...... மடவார்பால்
கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன்
கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
பூண்டுற வாடுதின ...... முளதோதான்
பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்
நீண்டிடு மாலொடய ...... னறியாது
பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்
ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர்
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே
பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை
சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே.
- சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து
சாந்தும், புனுகும் (மார்பில்) தோய்ந்தும், அழகு நிறைந்த கூந்தலை முகர்ந்து பார்த்தும், - பயோதரம் அது அணையாக சாய்ந்து ப்ரதாபமுடன்
வாழ்ந்து
மார்பகத்தையே தலையணையாகக் கொண்டு அதன் மேல் சாய்ந்தும், ஆடம்பரத்துடன் வாழ்ந்தும், - அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார் பால்
காம இச்சை இன்பத்தில், காந்தமும் ஊசியும் போல இழுக்கப்பட்டு, விலைமாதர்களிடத்தில் - கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி
மிக்கெழுந்த அன்பு மனத்தைத் தொலைத்து, உன்னுடைய திருவடியை அணுகி, - ஓர்ந்து உணரா உணர்வு இல் அடி நாயேன்
ஆய்ந்தறிந்து உணர்கின்றோம் என்ற உணர்ச்சி இல்லாத மெளன நிலையில் அடி நாயேனாகிய நான், - கூம்பு அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு
உறவாடு தினம் உளதோ தான்
குவிந்து அவிழ்ந்த தாமரை போன்ற அழகிய பதங்களாகிய, குற்றம் இல்லாத இரண்டு திருவடிகளையும் மனதில் கொண்டு அன்பு பூணும் நாள் ஒன்று உள்ளதோ? - பாந்தளின் மீது இனிதின் ஓங்கு க(ண்)ணே துயில்கொள்
நீண்டிடும் மாலொடு அயன் அறியாது
பாம்பாகிய ஆதிசேஷன் மேல் இன்பமாக விளங்கி கண் துயில் கொள்ளும் நீண்ட வடிவம் கொண்ட திருமாலும், பிரமனும் (அடி முடியை) காண முடியாது நின்று, - பாம்பு உருவான முநி வா(வு)ம் புலியான பதன் ஏய்ந்து எதிர்
காண நடம் இடும் பாதர்
பாம்பு வடிவத்தைக் கொண்ட (பதஞ்சலி) முனிவரும், தாவிச் செல்லும் புலியின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத முனிவரும் பொருந்தி நின்று, எதிரே தரிசிக்கும்படி நடனம் செய்கின்ற கூத்தப் பெருமானுடைய - பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகா
புரியில் அமர் வாழ்வே
அழகிய பூங்கொத்துக்களையும், பிறைச் சந்திரனையும் சூடியுள்ள ஜடாமகுடமாகிய பொன் வண்ணப் புரிசடையில் விரும்பி விளையாடும் குழந்தையே, - பூ ங்கமுகு ஆர்வு செறி(யூ)யும் கநகா புரிசை சூழு(ழ்)ம்
புலியூரில் உறை பெருமாளே.
அழகிய கமுகு மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளதும், நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்ததுமான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ்கின்ற பெருமாளே.



