திருப்புகழ் · 497காவி உடுத்தும் (சிதம்பரம்)

kAviuduththum

தான தனத்தம் தான தனத்தம்
தான தனத்தம் ...... தனதான
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந் ...... தடுமாறிக்
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் ...... திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும் ...... பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந் ...... தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந் ...... தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலை சிறக்கும் ...... புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • காவி யுடுத்தும்
    காவித் துணியை உடுத்திக் கொண்டும்,
  • தாழ்சடை வைத்தும்
    தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து வைத்தும்,
  • காடுகள் புக்கும் தடுமாறி
    காடுகளில் புகுந்து தடுமாறியும்,
  • காய்கனி துய்த்தும்
    காய், பழவகைகளைப் புசித்தும்,
  • காயம் ஒறுத்தும்
    தேகத்தை விரதங்களால் வருத்தியும்,
  • காசினி முற்றும் திரியாதே
    உலகம் முழுவதும் திரிந்து அலையாமல்,
  • சீவன் ஒடுக்கம்
    சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும்
  • பூத வொடுக்கம்
    ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும்
  • தேற உதிக்கும்
    நன்றாக உண்டாகும்படி,
  • பரஞான தீப விளக்கம் காண
    மேலான ஞான ஒளி விளக்கத்தினையான் காணும்படி,
  • எனக்குன் சீதள பத்மம் தருவாயே
    எனக்கு உன் குளிர்ந்த தாமரை அடிகளைத் தந்தருள்க.
  • பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
    பாவமே உருவெடுத்த தாருகாசுரன் கூட்டத்தினர்
  • பாழ்பட உக்ரம் தருவீரா
    பாழ்பட்டொழிய கோபம் காட்டிய வீரனே,
  • பாணிகள் கொட்டும் பேய்கள்
    போர்க்களத்தில் கைகளைக் கொட்டும் பேய்கள்
  • பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா
    உளறும் பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே,
  • தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்கும்
    அன்னங்கள் நிற்கும் வயல்கள் சூழ்ந்த
  • சோலை சிறக்கும் புலியூரா
    சோலைகள் விளங்கும் புலியூரனே (சிதம்பரேசனே),
  • சூரர் மிகக்கொண்டாட
    சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக
  • நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே.
    நடனமாடும் மயிலினை நடத்தும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits