தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி ...... அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக ...... முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு ...... மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள் ...... தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு ...... முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் ...... வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயிலை ...... யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு ...... பெருமாளே.
- எழுகடல் மணலை
ஏழு கடல்களின் கரையிலுள்ள மணலையெல்லாம் - அளவிடி னதிகம்
எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம் - எனதிடர் பிறவி அவதாரம்
என் துன்பம் நிறை பிறவிகள் என்ற அவதாரங்கள். - இனியுன தபய மெனதுயி ருடலும்
இனி உனக்கே அடைக்கலமாம் என் உயிரும், உடலும். - இனியுடல் விடுக முடியாது
இனியும் பிறப்பெடுத்து உடலைவிட என்னால் முடியாது. - கழுகொடு நரியு மெரிபுவி
கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், - மறலி கமலனு மிகவும் அயர்வானார்
யமனும், பிரம்மாவும், என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள். - கடனுன தபயம்
என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம் புகுவதே ஆகும். - அடிமையு னடிமை
யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை பூணுதற்கே ஆகும். - கடுகியு னடிகள் தருவாயே
நீ விரைவில் உன் திருவடிகளைத் தர வேண்டும். - விழுதிக ழழகி மரகத வடிவி
சிறந்து திகழும் அழகியும், பச்சை வடிவானவளும், - விமலிமு னருளும்
பரிசுத்தமானவளுமான பார்வதி முன்பே ஈன்றருளிய - முருகோனே
முருகப் பெருமானே, - விரிதல மெரிய குலகிரி நெரிய
விரிந்த பூமியானது பற்றி எரிய, கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட, - விசைபெறு மயிலில் வருவோனே
வேகமாக வரவல்ல மயிலில் வருபவனே, - எழுகடல் குமுற
ஏழு கடல்களும் கொந்தளிக்க - அவுணர்க ளுயிரை யிரைகொளும்
அசுரர்களின் உயிரை உணவாகக் கொள்ளும் - அயிலை யுடையோனே
வேலினை ஆயுதமாகக் கொண்டவனே, - இமையவர் முநிவர் பரவிய புலியுரினில்
தேவர்களும், முனிவர்களும்* வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் - நட மருவு பெருமாளே.
நடனம் செய்கின்ற பெருமாளே.



