திருப்புகழ் · 482காதைக் காதி (சிதம்பரம்)

kAdhaikkAdhi

தானத் தான தத்த தானத் தான தத்த
தானத் தான தத்த ...... தனதான
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
காமப் பூச லிட்டு ...... மதியாதே
காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி
னீழற் கேத ருக்கி ...... விளையாடிச்
சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த
சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார்
தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய்
மாதைக் காத லித்து வேடக் கான கத்து
வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே
வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா
வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ்
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத் தோர்து தித்த ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி அற்ற காமப் பூசல் இட்டு மதியாதே
    காதை வெட்டுவது போல வேகமாக (அந்தக் காதின் மேல்) மோதி, கேட்டறியாத காமப் போரை விளைவித்து, யாரையும் மதிக்காமல்,
  • கார் ஒத்த ஏய் நிறத்த ஓதிக் காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி
    மேகத்தை ஒத்து நிகர்க்கும் கருநிறத்தை உடைய கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி,
  • சேதித்தே கருத்தை நேர் உற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார்
    (தன்னைக் கண்டவர்களுடைய) கருத்தை அழித்து, ஒழுங்காக பெரிதாக விளங்கி சேல் மீன் போன்று (ஆண்களை) வருத்துகின்ற கண்களை உடைய பெண்களின்
  • தேமல் பார வெற்பில் மூழ்கித் தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய்
    தேமல் படர்ந்துள்ள கனத்த மலை போன்ற மார்பிலே மூழ்கி, காம வேட்கை மிக்க கொடுமையினின்றும், என்னுடைய உயிர் பிழைக்கும்படியான நல்ல வழிகளைத் தந்தருளுக.
  • மாதைக் காதலித்து வேடக் கானகத்து வாசத் தாள் சிவப்ப வருவோனே
    (வள்ளிப்) பெண் மீது ஆசை கொண்டு, வேடர்கள் வாழும் காட்டில் நறுமணம் வீசும் திருவடிகள் சிவந்து போகச் சென்றவனே,
  • வாரிக்கே ஒளித்த மாயச் சூரை வெட்டி மாளப் போர் தொலைத்த வடிவேலா
    கடலில் சென்று ஒளிந்துகொண்ட, மாயத்தில் வல்ல (மாமரமாகிய) சூரனை வெட்டி, அவன் மாளும்படி போர் செய்து முடித்த கூரிய வேலனே,
  • வீதித் தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீரத் தேர் மறைத்த புலியூர் வாழ்
    வீதியில் தேர் செல்லுவதால் எழும் தூசியிலே சூரியனுடைய வீரத் தேரும் மறைபடும் புலியூர் ஆகிய சிதம்பரத்தில் இருக்கும்
  • மேலைக் கோபுரத்து மேவிக் கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே.
    மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி ஞானம் மிக்க மறையோர்கள் துதிக்கின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits