திருப்புகழ் 481 ஆரத்தோடு அணி (சிதம்பரம்)

தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன
தானத் தானன தானன தானன ...... தனதான
ஆரத்  தோடணி  மார்பிணை  யானைகள் 
போருக்  காமென  மாமுலை  யேகொடு 
ஆயத்  தூசினை  மேவிய  நூலிடை  ......  மடமாதர் 
ஆலைக்  கோதினி  லீரமி  லாமன 
நேசத்  தோடுற  வானவர்  போலுவர் 
ஆருக்  கேபொரு  ளாமென  வேநினை  ......  வதனாலே 
காருக்  கேநிக  ராகிய  வோதிய 
மாழைத்  தோடணி  காதொடு  மோதிய 
காலத்  தூதர்கை  வேலெனு  நீள்விழி  ......  வலையாலே 
காதற்  சாகர  மூழ்கிய  காமுகர் 
மேலிட்  டேயெறி  கீலிகள்  நீலிகள் 
காமத்  தோடுற  வாகையி  லாவருள்  ......  புரிவாயே 
சூரர்க்  கேயொரு  கோளரி  யாமென 
நீலத்  தோகைம  யூரம  தேறிய 
தூளிக்  கேகடல்  தூரநி  சாசரர்  ......  களமீதே 
சோரிக்  கேவெகு  ரூபம  தாவடு 
தானத்  தானன  தானன  தானன 
சூழிட்  டேபல  சோகுக  ளாடவெ  ......  பொரும்வேலா 
வீரத்  தால்வல  ராவண  னார்முடி 
போகத்  தானொரு  வாளியை  யேவிய 
மேகத்  தேநிக  ராகிய  மேனியன்  ......  மருகோனே 
வேதத்  தோன்முத  லாகிய  தேவர்கள் 
பூசித்  தேதொழ  வாழ்புலி  யூரினில் 
மேலைக்  கோபுர  வாசலில்  மேவிய  ......  பெருமாளே. 
  • ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம் என மா முலையே கொடு
    முத்து மாலையோடு ஆபரணங்களைக் கொண்ட மார்பில் இணையாக உள்ள யானைகள் சண்டைக்கு எழுந்துள்ளன போன்ற பெரிய மார்பகங்களைக் கொண்டவர்களாய்,
  • ஆயத் தூசினை மேவிய நூல் இடை மட மாதர்
    தேர்ந்து எடுத்த ஆடையை அணிந்துள்ள நுண்ணிய இடையை உடைய அழகிய மாதர்கள்,
  • ஆலைக் கோதினில் ஈரம் இலா மன நேசத்தோடு உறவானவர் போலுவர்
    கரும்பாலையில் சாறு நீங்கிய சக்கை போல் கருணை இல்லாத மன அன்புடனே உறவு கொண்டவர் போன்றவர்கள்,
  • ஆருக்கே பொருளாம் எனவே நினைவு அதனாலே
    யாரோடு உறவு கொண்டால் காசு கிடைக்கும் என்ற ஒரு எண்ணத்தையே நினைவாகக் கொண்ட காரணத்தால்,
  • காருக்கே நிகராகிய ஓதிய மாழைத் தோடு அணி காதொடு மோதிய காலத் தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே
    கருமேகத்துக்கு ஒப்பான கூந்தலை உடையவர்கள், பொன்னாலாகிய தோடு என்கின்ற ஆபரணத்தை அணிந்த காதை வந்து மோதுகின்ற, யமனுடைய தூதவரின் கையில் உள்ள வேல் போலுள்ள, நீண்ட கண்கள் என்கின்ற வலையாலே,
  • காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே எறி கீலிகள் நீலிகள்
    காதல் கடலில் முழுகிய காமுகர் மீதிற்பட்டு அவர்கள் அதிரும்படி எறிகின்ற தந்திரவாதிகள், நீலி என்னும் பேய் போல் நடிக்க வல்லவர்களாகிய விலைமாதர்கள் மீது
  • காமத்தோடு உறவாகை இலா அருள் புரிவாயே
    காமவசப்பட்டு உறவுகொள்ளுதல் இல்லாதபடி அருள் புரிவாயாக.
  • சூரர்க்கே ஒரு கோளரியாம் என நீலத் தோகை மயூரம் அது ஏறிய
    சூரர்களை அழிப்பதற்கே எனத் தோன்றிய ஒரு சிங்கம் போல், நீலத் தோகையை உடைய மயிலின் மேல் ஏறியவனே,
  • தூளிக்கே கடல் தூர நிசாசரர் கள(ம்) மீதே சோரிக்கே வெகு ரூபமதா(ய்) அடு
    புழுதியால் கடல் நிரம்பி தூர்ந்து போக, அசுரர்கள் போர்க்களத்தில் ரத்த மயமாக விளங்கப் போர் செய்து,
  • தானத் தானன தானன தானன சூழிட்டே பல சோகுகள் ஆடவெ பொரும் வேலா
    தானத் தானன தானன தானன என்று சூழ்ந்து கொண்டு பல பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படி சண்டை செய்த வேலனே,
  • வீரத்தால் வல ராவணனார் முடி போகத் தான் ஒரு வாளியை ஏவிய மேகத்தே நிகராகிய மேனியன் மருகோனே
    வீரத்தில் வல்ல ராவணனுடைய தலைகள் அற்று விழ, ஒரு ஒப்பற்ற அம்பைச் செலுத்திய, மேகம் போன்று கறுத்த நிறமுடைய மேனியைக் கொண்ட, (ராமனின்) திருமாலின் மருகனே,
  • வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ் புலி ஊரினில்
    பிரமன் முதலாகிய தேவர்கள் எப்போதும் பூஜை செய்து தொழுது வாழும் சிதம்பரத்தில்,
  • மேலைக் கோபுர வாசலில் மேவிய பெருமாளே.
    மேற்குக் கோபுர வாசலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com